2016-02-10 15:38:00

இயற்கையைப் பாதுகாப்பது, காரித்தாஸின் தவக்கால முயற்சி


பிப்.10,2016. இயற்கையைப் பாதுகாக்க அனைத்து மதங்களைச் சாரந்தவர்களும் முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை, இந்தியக் காரித்தாஸ் நிறுவனம், தன் தவக்காலச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

'இவ்வுலகம் என்ற இல்லத்தைப் பேணிக் காப்பதற்கு' என்ற கருத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடல், இந்த விண்ணப்பத்தின் பின்னணியாக அமைந்துள்ளது என்று, UCAN  செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

கரியமல வாயுவின் வெளியேற்றத்தைக் குறைப்பது, மற்றும் புறக்கணிக்கப்பட்ட மனிதக் குழுக்களின் மீது அக்கறை கொள்வது ஆகியவை, இந்த தவக்கால முயற்சிகளாக அமையும் என்று, இந்தியக் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், அருள்பணி பிரடெரிக் டிசூசா அவர்கள் கூறினார்.

2017ம் ஆண்டு சனவரி மாதம் வரை நீடிக்கும் இந்த முயற்சியில், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு மேற்கொள்ளப்படும் என்று அருள்பணி டிசூசா அவர்கள் தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் ஒரு மரமாகிலும் நடுதல் என்பது, பிப்ரவரி மாத முயற்சியாகவும், சொந்த வாகனங்களுக்குப் பதில், பொது வாகனங்களைப் பயன்படுத்துவது மார்ச் மாத முயற்சியாகவும் அமையும் என்று காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி டிசூசா அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.