2016-02-09 15:52:00

பங்களாதேஷில் அருள்சகோதரிகள் இல்லம், ஆலயம் சேதம்


பிப்.09,2016. பங்களாதேஷ் நாட்டில், இருபது பேர் கொண்ட கும்பல் ஒன்று, அருள்சகோதரிகள் இல்லம் ஒன்றையும், ஒரு கத்தோலிக்க ஆலயத்தையும் தாக்கியுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.

டாக்கா நகருக்கு மேற்கே, 161 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Chuadanga மாவட்டத்திலுள்ள Karpashdanga ஆலயத்தையும், அமலமரி வேதியர் சகோதரிகள் இல்லத்தையும், பிப்ரவரி 6ம் தேதிக்கும், 7ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், இக்கும்பல் சூறையாடித் திருடிச் சென்றுள்ளது.

முதலில் ஆலயத்தில் நுழைந்த அக்கும்பல், செபப் புத்தகங்களை அழித்துவிட்டு, பின்னர் அந்த அருள்சகோதரிகள் இல்லத்திற்குச் சென்று, உறங்கிக் கொண்டிருந்த மூன்று சகோதரிகளையும் துப்பாக்கி முனையில் மிரட்டி திருடிச் சென்றுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

அந்த இல்லத்தில் நடந்து வந்த கட்டுமானப் பணிகளுக்கென அச்சகோதரிகள் வைத்திருந்த 3 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் உட்பட மற்ற பொருள்களையும் அக்கும்பல் திருடிச் சென்றுள்ளது. 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.