2016-02-09 15:51:00

துன்புறும் சிரியா மக்கள் மீது திருத்தந்தை மிகுந்த அக்கறை


பிப்.09,2016. சிரியா நாட்டில் அமைதி ஏற்படுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் வியந்து பாராட்டப்பட வேண்டியவை என்று, அந்நாட்டுத் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி அவர்கள் கூறினார்.

இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் சிரியாவில் அமைதி ஏற்படவும், துன்புறும் சிரியா மக்களுக்கு உதவிகள் வழங்கப்படவும் திருத்தந்தை விடுத்த அழைப்பு பற்றிப் பேசிய பேராயர் செனாரி அவர்கள், திருத்தந்தை சிரியா மக்கள் மீது வைத்துள்ள அன்பையும், அக்கறையையும் உணர முடிகின்றது என்றும் கூறினார்.

துன்புறும் அப்பாவி மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளுமாறு விசுவாசிகளைத் திருத்தந்தை கேட்டுக்கொண்டது இதயத்தை நெகிழச் செய்தது என்று கூறிய பேராயர், சிரியாவில் அமைதி குறித்த பேச்சுவார்த்தைகள் இரு நாட்கள் நடந்த பின்னர், ஒரு முடிவும் இன்றி நிறுத்தப்பட்டாலும், அதை மீண்டும் தொடர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

சிரியாப் போரில் வேதிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டது போல, அந்நாட்டில் அமைதி நிலவ ஒரு புதுமை நடக்க வேண்டும் என்றும், போரிடும் இருதரப்புகள் மத்தியிலும் நன்மனம் நிலவினால், நல்ல பலன்களை எட்டலாம் என்றும் கூறினார் பேராயர் செனாரி.

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய போரில், 2,60,000த்திற்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும், 46 இலட்சம் சிரியா மக்கள் ஜோர்டன், லெபனான், துருக்கி, ஈராக், எகிப்து மற்றும் சில நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.