2016-02-09 14:55:00

இது இரக்கத்தின் காலம் : இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்


கொரியாவில் நிகழ்ந்து வந்த போரில், அமெரிக்க இராணுவத்தின் சார்பில் பணியாற்றிவந்த ஓர் அருள் பணியாளரைக் குறித்து சொல்லப்படும் உண்மைச் சம்பவம் இது. அப்போரில் காயப்பட்டு, உயிருக்குப் போராடிவந்த ஒரு வீரர், இறப்பதற்கு முன், ஒப்புரவு அருட்சாதனம் பெறவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டார். அவருக்கு மருத்துவ உதவிகள் செய்தவர், திகைத்தார். இந்தப் போர்க்களத்தில் ஓர் அருள்பணியாளரைத் தேடி எங்கே போவது? என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்தபோது, அந்த வீரனுக்கு அருகில், மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த மற்றொரு வீரர், "நான் ஓர் அருள்பணியாளர்" என்று தன்னையே அறிமுகப்படுத்தினார். அவரது நிலையைக் கண்ட மருத்துவர், "நீங்கள் அசையாதீர்கள். அசைந்தால், உங்கள் உயிருக்குப் பெரும் ஆபத்து" என்று அந்த அருள்பணியாளரிடம் எச்சரித்தார். அதற்கு அந்த அருள்பணியாளர், "நான் வாழப்போகும் இந்த ஒரு சில மணித்துளிகளை விட, என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்." என்று சொன்னபடி, தன்னிடம் எஞ்சியிருந்த சக்தியை எல்லாம் திரட்டி, தரையோடு தரையாக ஊர்ந்து சென்றார். சாகும் நிலையில் இருந்த அந்த வீரனின் இறுதி நேரத்தில், அவருக்கு ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்கினார். அந்த வீரனும், அருள்பணியாளரும் அமைதியாக இறந்தனர்.

இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு சிறப்பு நிகழ்வாக, பிப்ரவரி 10, 'திருநீற்றுப் புதனன்று' திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1000க்கும் மேற்பட்ட அருள் பணியாளரை, 'இரக்கத்தின் மறைப்பணியாளர்களாக' (Missionaries of Mercy) உலகெங்கும் அனுப்பி வைக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.