2016-02-08 11:32:00

வாரம் ஓர் அலசல் – திருடப்பட்ட மக்கள், திருடப்பட்ட கனவுகள்


பிப்.08,2016. ஒரு நதிக்கரையில் இருவர் நின்றிருந்தனர். வேகமாக ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில், கம்பளி ஒன்று அடித்துச் செல்வதைப் பார்த்தனர். உடனே ஒருவர் நீரில் இறங்கி, அதனைக் கைப்பற்ற முனைந்தார். ஆனால், தண்ணீரின் வேகம் அவரையும் அடித்துச் சென்றது. கரையில் நின்றவர், ‘கம்பளி கிடைக்காவிட்டால் பரவாயில்லை; நீ கரையேறு!’ என்றார். ‘நான் அதைப் பற்றிக்கொள்ளவில்லை; அதுதான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இது கம்பளி அல்ல; கரடி’ என்று கதறினார் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர். இந்தக் கதையைச் சொன்ன துறவி ஒருவர், வாழ்க்கையில் அலட்சியமாக இருக்கும் தருணங்களில், பலவீனங்களை விளையாட்டாகத் தொடங்கி, பின்பு அதற்கு அடிமையாகிப் பலர் தங்கள் வாழ்க்கையையே அழித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் மனிதர் மிகுந்த விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். மனிதரைக் கீழ்நிலைக்குத் தள்ளிவிடக் கூடிய ஆற்றல் படைத்த பல்வேறு விதமான பலவீனங்கள் இருக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதுதான் வாழ்க்கை என்று விளக்கினார். அன்பு நேயர்களே, நம் வாழ்க்கையில் நாம் விலகிச் செல்ல வேண்டிய, தவிர்த்து நடக்க வேண்டிய காரியங்களுள் அடிமைநிலையும் ஒன்று. நாம் பல்வேறு நிலைகளில் நம்மையே அடிமைப்படுத்தி வாழ்கிறோம், பிறரையும் அடிமைப்படுத்தித் துன்புறுத்துகிறோம்.

இந்தியாவில் 1929ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி குழந்தைத் திருமணம் தடை செய்யப்படும் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆண்களுக்கு 18, பெண்களுக்கு 14 என்று அச்சமயத்தில் திருமண வயது நிர்ணயிக்கப்பட்டு, பின்னர், ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18 என்று திருமண வயது மாற்றப்பட்டது. எனினும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை. “இந்தியாவின் விவாகரத்தான இளம் வயது பெண் எட்டு வயது பாத்திமா மங்க்ரே”என்ற ஒரு செய்தி இஞ்ஞாயிறன்று வெளியாகியிருந்தது. உத்தரபிரதேச மாநிலம் சிரவஸ்தி பகுதியைச் சேர்ந்த பாத்திமா மங்கரேவிற்கு நான்கு வயதாக இருக்கும்போதே, பத்து வயதான அர்ஜூன் பக்ரிதிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்த விவாகரத்தை அறிவித்துள்ள அர்ஜீன், தான் இளம்வயதிலேயே திருமணம் செய்துகொண்டது தவறுதான் என்பதை தற்போது உணர்ந்திருப்பதாகவும், தனக்கு இப்போது 14 வயதாகின்றது எனவும், பாத்திமாவை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

பெண்ணடிமைத்தனம் இந்தியாவில் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளிலும் காணப்படுகின்றது. சவுதி அரேபியாவில் தேசிய குடும்ப பாதுகாப்புத் திட்டம் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி அண்மையில் வெளியிட்ட சில விபரங்களை இஞ்ஞாயிறன்று ஆசியச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சவுதியில் ஏறக்குறைய 18 ஆயிரம் சிறார் மற்றும் இளையோரிடம் நடத்திய ஆய்வில், 13 விழுக்காட்டினர் பாலியல் வன்முறைக்கும், 53 விழுக்காட்டினர் குடும்பத்தின் புறக்கணிப்புக்கும், எண்பது விழுக்காட்டுச் சிறார் உடலளவில் அல்லது மன அளவில் உரிமை மீறலுக்கும் பலியாகியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது தவிர, உலக அளவில், ஏறக்குறைய 2 கோடியே பத்து இலட்சம் பேர், பாலியல் தொழில், கட்டாய வேலை, பிச்சையெடுத்தல், சட்டத்திற்குப் பறம்பே உடல் உறுப்புகளை அகற்றல், வீட்டுக் கொத்தடிமை, கட்டாயத் திருமணம், சட்டத்திற்குப் புறம்பே தத்து எடுத்தல், இன்னும் பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 25 இலட்சம் பேர், மனித வர்த்தகத்திற்கும், அடிமை முறைக்கும் பலியாகின்றனர். அதேநேரம், உலகில் சட்டத்திற்குப் பறம்பே நடக்கும் கொடும் செயல்களில் ஒன்றாகிய மனித வர்த்தகத்தை நடத்தும் கும்பல்கள், ஆண்டுக்கு 3,200 கோடி டாலர்கள் வீதம் பணம் சம்பாதிக்கின்றன. உலகில் போதைப்பொருள் மற்றும் ஆயுத வியாபாரத்திற்கு அடுத்த நிலையில், பணம் ஈட்டித் தருவது மனித வர்த்தகமாகும். சிரியாவில் நடக்கும் சண்டை, இந்த மனித வர்த்தகர்களுக்கு இன்னும் சாதமாக இருக்கின்றது. சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் மக்களில் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளும், பெண்களும் இந்த வர்த்தகர்களிடம் சிக்கியுள்ளனர். உலகில் இடம்பெறும் மனிதமற்ற இக்கொடூரச் செயலை நிறுத்துவதற்கு பல்வேறு நிறுவனங்களும், பெண்ணுரிமை ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர்.

அதோடு, இந்த மனித வர்த்தகம் பற்றிய விழிப்புணர்வை உலகினர் மத்தியில் உருவாக்கவும், இந்த அநீத நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, அடிமைகளாக,  தங்களுக்கென குரல் எழுப்ப முடியாமல், துன்புறும் மக்களின் நிலைகளைப் புரிந்து, அவர்களுக்காகச் செபிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவை ஓர் உலக நாளை உருவாக்கியுள்ளது. திருப்பீட புலம்பெயர்ந்தவர் அவை, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவை, அனைத்துலக துறவு சபைகள் தலைவர்கள் அவை ஆகிய மூன்று அவைகளின் முயற்சியால் இந்த உலக தினம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாள், பிப்ரவரி 8ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. 2015ம் ஆண்டில், இந்த உலக செப நாள்,  முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட இந்த உலக நாளை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,

"இந்தப் புதிய அடிமைகள், பயன்படுத்தல் என்ற பளுவானச் சங்கிலிகளைத் தகர்த்தெறியவும், தங்களின் சுதந்திரம் மற்றும் மாண்பை மீண்டும் பெறவும் உதவுவதற்கு இந்த உலக நாள் எல்லாருக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இந்த வர்த்தகத்திற்கு அடிமைகளாகியுள்ள எண்ணற்ற பெண்கள், ஆண்கள் மற்றும் சிறாரை இந்த நாளில் சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன். சகித்துக்கொள்ள முடியாத வெட்கத்துக்குரிய இந்தக் குற்றத்தை அறவே ஒழிக்கவும் நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், சிரியாவில் இடம்பெறும் கடும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை. இந்த அன்புக்குரிய நாட்டில் அரசியல் தீர்வு வழியாக மட்டுமே, ஒப்புரவும் அமைதியும் ஏற்படும், அதற்காகச் செபிப்போம் என்றும் விசுவாசிகளிடம் கூறிச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்பு நேயர்களே, சண்டைகளால் மக்கள் பல்வேறு விதமான அடிமைமுறைகளுக்குப் பலியாகின்றனர், அதோடு வறுமை மற்றும் பசியும் இதற்குக் காரணம். மனித வர்த்தகத்தில் பலியாகுபவர்களுக்காகச் செபிக்கும் உலக செப நாள் பிப்ரவரி 8, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கான இந்த உலக நாள் அமெரிக்க ஐக்கிய நாட்டில், கடந்த சனவரி 11ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை செபம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளால் சிறப்பிக்கப்பட்டது. இந்த உலக நாள் புனித ஜோஸ்பின் பக்கீத்தா அவர்களின் விழா நாளாகும்.

தென் சூடானில் 1869ம் ஆண்டில் பிறந்த இந்த ஆப்ரிக்கா மலர், பலமுறை கடத்தப்பட்டு பலரிடம் அடிமையாக வேலை செய்தவர். இவர் சிறுவயதிலே எதிர்கொண்ட கொடுமைகளால் தனது பெயரே என்னவென்று தெரியாமல் இருந்தார். எனவே, இவரைக் கடத்தியவர்கள், அதிர்ஷ்டசாலி என்று பொருள்படும் பக்கீத்தா என்ற பெயரைச் சூட்டினார்கள். El Obeid மற்றும் Khartoum சந்தைகளில் விற்கப்பட்ட இவர், உடல் அளவிலும், நன்னெறி முறையிலும், மிகவும் தரக்குறைவாக நடத்தப்பட்டு, அடிமையாகத் துன்புறுத்தப்பட்டார். சூடான் தலைநகரிலிருந்து Callisto Legnani என்ற இத்தாலிய தூதரக அதிகாரியால் இத்தாலிக்கு அழைத்துவரப்பட்ட பக்கீத்தா அவர்கள், அந்த அதிகாரியின் இல்லத்தில் முதல் முறையாக அன்பையும், அமைதியையும், மகிழ்வையும் சுவைத்தார். அரசியல் சூழல் காரணமாக,இந்த அதிகாரி இத்தாலிக்குத் திரும்பினார். இத்தாலியின் Mirano Venetoவுக்கு அருகில், Zianigo என்ற ஊரில் இவர்கள் வாழ்ந்தனர். அக்குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு பக்கீத்தாவிடம் கொடுக்கப்பட்டது. வெனிஸ் நகரில் கனோசியன் அருள்சகோதரிகளிடம், பக்கீத்தாவும், அவ்வீட்டுச் சிறுமியும் பயின்றனர். அப்படியே கத்தோலிக்கராகி, அந்த துறவு சபையிலும் சேர்ந்தார் பக்கீத்தா. ஜோஸ்பின் பக்கீத்தா என்ற பெயரை ஏற்ற இவர், 1947ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி இறந்தார். 2000மாம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி இவர் புனிதராக அறிவிக்கப்பட்டார். இந்த ஆப்ரிக்க அடிமை புனித பக்கீத்தா இறந்த நாளே மனித வர்த்தகத்தில் பலியாகுபவர்களுக்காகச் செபிக்கும் உலக நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

வாழ்க்கைக் கடலுக்கு நடுவே தீவைப் போல, நீ அரண் செய்து கொள், ஊக்கமும் அறிவும் உடையவனாய் இரு. மாசுகள் அகன்று நீ தூயவனாகி விட்டால் ஒளிமிக்க மேலோர் வாழும் உலகை நீ அடையலாம். அதன்பிறகு, உனக்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை என்ற புத்தரின் சிந்தனைப்படி வாழ்ந்தவர் புனித ஜோஸ்பின் பக்கீத்தா. மனித வர்த்தகத்திற்குப் பலியாகுபவர்கள், வர்த்தகர்களால் திருடப்பட்டவர்கள். இவர்களின் வாழ்க்கைக் கனவுகளும் திருடப்பட்டு விடுகின்றன. இம்மக்கள் எதிர்கொள்ளும் சொல்ல முடியாத துன்பங்கள் குறித்த விழிப்புணர்வும், அவர்கள் குறித்த தகவல்களும், செபமும் இந்தக் கொடூர மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு உதவும். திருடப்பட்ட இம்மக்களின்  திருடப்பட்ட கனவுகள் உயிர்பெற உதவுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.