2016-02-08 17:04:00

மெக்சிகோ மக்களை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக திருத்தந்தை


பிப்.08,2015.  மெக்சிகோ மக்கள் குறித்து நல்ல நினைவுகளைத் தாங்கி, அவர்களை இதயத்திலேயே சுமந்து, அவர்கள் நாட்டிற்குச் சென்று சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாரம் வெள்ளி முதல் மெக்சிகோ நாட்டில் 6 நாள் திருத்தூது திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதையொட்டி, அந்நாட்டு மக்களுக்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனால் அன்பு கூரப்பட்டு, அனனை மரியா அவர்களுக்கு நெருக்கமாக உள்ள, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மெக்சிகோ மண்ணிற்கு, இரக்கம் மற்றும் அமைதியின் திருப்பயணியாக தான் வருவதாக அதில் கூறியுள்ளார்.

மக்களனைவரையும், குறிப்பாக, நோயாளிகளைச் சந்தித்து, அவர்களை இயேசு அன்பு கூர்கிறார், அவர்கள் அருகில் எப்போதும் இருக்கிறார் என்பதைத் தெரிவிக்க, தான் மெக்சிகோ நாட்டிற்கு வருவதாகக் கூறும் திருத்தந்தை, தன்  திருப்பயணத்தின் வெற்றிக்காக மெக்சிகோ மக்கள் சிறப்பான விதத்தில் செபித்து வருவதை அறிந்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவின் குவாதாலூப்பே அன்னைமரி திருத்தலத்தைச் சந்திக்க, ஆவலுடன் காத்திருப்பதாகவும், தன் காணொளிச் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.