2016-02-08 16:56:00

அரசியல் தீர்வு வழியாக மட்டுமே சிரியாவில் அமைதி - திருத்தந்தை


பிப்.08,2016. அன்புக்குரிய சிரியா நாட்டில் அரசியல் தீர்வு வழியாக மட்டுமே, ஒப்புரவும் அமைதியும் ஏற்படும் என்று இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிரியாவில் அமைதிக்காக அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டில் போரிடும் தரப்புகள் அனைத்தும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, பன்னாட்டு சமுதாயம் ஆவன செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

சிரியாவில் இடம்பெறும் போரில் சிக்கியுள்ள அப்பாவி குடிமக்கள் குறித்து கவலை தெரிவித்த திருத்தந்தை, போரினால் கட்டாயமாகப் புலம்பெயரும் மக்கள், மாண்புடன் கூடிய வாழ்வு வாழ்வதற்கு உதவிகள் வழங்கப்படுமாறும் வலியுறுத்தினார்.

மேலும், மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களுக்காகச் செபிக்கும் உலக நாள் இத்திங்களன்று கடைப்பிடிக்கப்படுவதைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "இந்தப் புதிய அடிமைகள், பயன்படுத்தல் என்ற பளுவானச் சங்கிலிகளைத் தகர்த்தெறியவும், தங்களின் சுதந்திரம் மற்றும் மாண்பை மீண்டும் பெறவும் உதவுவதற்கு இந்த உலக நாள் எல்லாருக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இந்த வர்த்தகத்திற்கு அடிமைகளாகியுள்ள எண்ணற்ற பெண்கள், ஆண்கள் மற்றும் சிறாரை இந்நாளில் சிறப்பாக நினைத்துப் பார்க்கின்றேன். சகித்துக்கொள்ள முடியாத, வெட்கத்துக்குரிய இந்தக் குற்றத்தை அறவே ஒழிக்க நாம் எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்

புனித ஜோஸ்பின் பக்கீத்தா இறந்த நாளான பிப்ரவரி 8ம் தேதி, மனித வர்த்தகத்திற்குப் பலியானவர்களுக்காகச் செபிக்கும் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இன்னும், பிப்ரவரி 8, இத்திங்களன்று லூனார் புதிய ஆண்டைச் சிறப்பித்த தூர கிழக்கு நாட்டினருக்கு வாழ்த்தையும் செபத்தையும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சீனா, சிங்கப்பூர், வியட்நாம் போன்ற பல நாடுகளில் லூனார் புதிய ஆண்டு இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது. ஏதாவது ஒரு விலங்கு பெயரில் லூனார் ஆண்டு சிறப்பிக்கப்படுகின்றது. இவ்வாண்டு குரங்கு ஆண்டாகும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.