2016-02-06 14:41:00

பொதுக்காலம் 5ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


ஒரு விமான நிலையத்தில் நடந்த உண்மை நிகழ்வு இது. விமானப் பயணத்திற்கெனக் காத்திருந்தவர்கள், பொறுமை இழக்கத் துவங்கினர். அவர்கள் செல்லவேண்டிய விமானம், அரை மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று சொல்லி, ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. எனவே, எல்லாப் பயணிகளும் எரிச்சலடைந்தனர். பார்க்கும் அனைத்துப் பணியாளர்களிடமும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பணியாளர்களும், செய்வதறியாது, ஓடி ஒளிந்தனர்.

ஒரே ஒரு பணிப்பெண் மட்டும், பயணிகளிடம் அன்பாக, பொறுமையாகப் பேசி, அவர்களை ஓரளவு சமாதானப்படுத்தினார். ஒருவழியாக, விமானத்தில் அனைவரும் ஏறி அமர்ந்தனர். விமானத்திற்குள்ளும், அந்த பணிப்பெண் மட்டும், அனைவரிடமும், தொடர்ந்து, கனிவுடன் நடந்துகொண்டார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பயணி, அப்பெண்ணிடம், "நான் உங்கள் நிறுவனத்திற்கு உங்களைப்பற்றி எழுதி, உங்களுக்குப் பதவி உயர்வு தரும்படி சிபாரிசு செய்யப்போகிறேன்" என்று கூறினார். அதற்கு அப்பெண், "சார், நான் இந்த நிறுவனத்திற்காகப் பணியாற்றவில்லை. இயேசுவுக்காகப் பணியாற்றுகிறேன். இன்று காலை, நானும், என் கணவரும் எழுந்ததும், ஒன்றாக செபித்தோம்... இன்றைய விமானப் பயணம் எவ்வகையில் அமைந்தாலும் சரி, அப்பயணத்தில் நான் இயேசுவின் பிரதிநிதியாகச் செயலாற்ற வேண்டும் என்று இருவரும் செபித்தோம்" என்று கூறியபின், அப்பெண் தன் கனிவுப் பணியைத் தொடர்ந்தார்.

அப்பெண் செய்ததோ, விமானப் பணிப்பெண் என்ற வேலை. ஆனால், அதை அவர் செய்த விதம், அந்த வேலையை ஓர் அழைப்பாக மாற்றியது. அழைப்பைப்பற்றி பேச எத்தனையோ அற்புதமான நிகழ்ச்சிகள் இருக்கும்போது, ஒரு விமானப் பணிப்பெண், தன் கடமையைச் செய்ததை முன்னிறுத்தி நான் அழைப்பைப் பற்றி பேசுவதை ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம். இந்தப் பெண் தன் கடமையை இன்னும் சிறிது கருத்தோடு, கனிவோடு செய்தது, அதற்கும் மேலாக, தான் அவ்விதம் பணியாற்றுவதற்கு, இயேசுவே காரணம் என்று தயக்கமின்றி அறிக்கையிடுவது இவற்றை வைத்தே, இந்த நிகழ்வைப் பகிர்ந்துகொண்டேன். கொடுத்த பணியை முழுமையாகச் செய்வதும், வாய்ப்பு கிடைக்கும்போது, அந்தப் பணியின் வழியே கடவுளைப் பறைசாற்றுவதும்தானே அழைப்பு!

'அழைப்பு' என்ற வார்த்தையைக் கேட்டதும், நாம் அதற்கு, 'தேவ அழைத்தல்' என்ற ஓர் ஆன்மீக வண்ணம் பூசி, உயரத்தில் வைத்துவிடுகிறோம். 'அழைப்பு' என்ற எண்ணத்தை நம் அனுதின வாழ்விலிருந்து அன்னியப்படுத்திவிடுகிறோம். எனவேதான், இந்த விமானப் பணிப்பெண் நிகழ்வை, 'அழைப்பு' என்ற கோணத்தில் சிந்திக்கத் தயங்குகிறோம். இந்த ஞாயிறன்று, 'அழைப்பு' என்ற எண்ணத்தை சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள, அதை, நம் தினசரி வாழ்வின் ஓர் அங்கமாகச் சிந்திக்க, நமக்கோர் அழைப்பு தரப்பட்டுள்ளது. தங்களுக்குக் கிடைத்த அழைப்பை அசைபோடும், இறைவாக்கினர் எசாயாவையும், திருத்தூதர் பவுலையும் முதல் இரு வாசகங்களில் சந்திக்கிறோம். இயேசு தன் முதல் சீடர்களை அழைத்த நிகழ்வு இன்று நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளது.

விவிலியம் முழுவதும் நாம் காணும் பெரும்பாலான 'அழைப்புக்கள்', கோவிலில், இறைவனின் சந்நிதியில் வந்தவை அல்ல. அவை, சாதாரண, தினசரி வாழ்வு நிகழ்வுகளில் வந்தவை என்பதை, விவிலியம் மீண்டும், மீண்டும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

கிறிஸ்தவர்களைக் கொல்வதற்கு, அல்லது, கைதுசெய்வதற்கு வெறிகொண்டு குதிரையில் விரைந்துகொண்டிருந்த பவுலை, அந்தக் குதிரையிலிருந்து கீழே தள்ளி, இயேசு அழைத்தார். மீன்பிடித்துக் கொண்டிருந்த பேதுருவை, இயேசு, அந்த மீன்பிடிப் படகில் நின்றபடி அழைத்தார்.

இயேசு, பேதுருவை 'மனிதர்களைப் பிடிக்கும்' பணிக்கு அழைத்த காட்சி, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் மட்டும் இந்த அழைப்பு நிகழ்வு, ஓர் அற்புத மீன்பிடிப்புடன் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நடைபெறும் இடம், கெனசரேத்து ஏரி என்று நற்செய்தியாளர் லூக்கா குறிப்பிடுகிறார். மத்தேயு, மாற்கு இருவரும் இதே இடத்தை, கலிலேயக் கடல் (மத். 4,18; மாற். 1,16) என்று குறிப்பிடுகின்றனர். இதே இடத்தை, இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நடைபெறும் ஒரு நிகழ்வுக்குப் பின்னணியாக, திபேரியக் கடல் என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிடுகிறார் (யோவான் 21:1).

கெனசரேத்து ஏரி, கலிலேயக் கடல், அல்லது, திபேரியக் கடல் என்று பலவாறாக அழைக்கப்படும் இந்த நீர்நிலை, நல்ல, குடிநீர் நிறைந்த பெரிய ஏரி. இந்த ஏரியின் நீளம் 21 கி.மீ. அகலம், 13 கி.மீ. மேலும், காற்றின் வேகத்தால் இந்த ஏரியில் அலைகளும் எழுவதுண்டு. எனவே, இயேசுவின் காலத்தில், வாழ்ந்தவர்கள், இதனை ஒரு கடல் என்று எண்ணியதில் வியப்பில்லை. இந்த ஏரியைச் சுற்றி, பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் அமைந்திருந்ததென சொல்லப்படுகிறது. அம்மக்களின் முக்கியத் தொழில் மீன்பிடிப்பு. பல்லாயிரம் மீனவர்களின் வாழ்வு ஆதாரமாக விளங்கிய கெனசரேத்து ஏரியில், பேதுருவைச் சந்திக்க இயேசு வருகிறார். நற்செய்தியாளர் லூக்கா விவரிக்கும் இக்காட்சியை நாம் சிறிது அசைபோடுவோம். - லூக்கா நற்செய்தி  5 : 1-3

இயேசு ஏரிக்கரை ஓரமாய் நிற்கிறார். மலைப் பொழிவில் அவர் சொன்னதைக் கேட்டு மனதைப் பறிகொடுத்தவர்கள், இன்னும் பலரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். எனவே திரளான மக்கள் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்தனர் என்று நற்செய்தி ஆரம்பமாகிறது. அப்போது, இயேசு சில புதுமைகளையும் ஆரம்பித்து வைக்கிறார். சீமோனின் படகில் இயேசு ஏறியது, முதல் புதுமை. இயேசுவைப் பற்றி முன்பின் அறியாவதர் சீமோன். அவர் வழக்கம் போல் மீன் பிடிக்க வந்தவர். அதுவும் முந்திய இரவு முழுவதும் உழைத்தும் ஒரு பயனையும் காணாமல், மனம் நொந்து போய் அமர்ந்திருந்தார் அவர். மீன் பிடிப்பு இல்லையென்றால்... வருமானம் இல்லை, வீட்டில் உணவுக்கு வழியில்லை... இப்படி, தன் சொந்தக் கவலையில் மூழ்கியிருந்த சீமோனின் படகு அசைகிறது. நிமிர்ந்து பார்க்கும் சீமோனுக்கு ஆச்சரியம், கொஞ்சம் கோபமும் கூட இருந்திருக்கும். முன்பின் தெரியாத ஒரு புது மனிதர், அவரது படகில், அவரது உத்தரவு இல்லாமல் ஏறியிருந்தார்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர், முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், நம் வாழ்வில் நுழைந்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கலாம். இன்னும் மூன்று நாட்களில் நாம் துவங்கவிருக்கும் தவக்காலம், இது போன்ற நுழைவுகளை நினைத்துப் பார்க்க ஒரு நல்ல காலம். இந்த நுழைவு, நல்ல விளைவுகளை உருவாக்கினால், வாழ்நாள் முழுவதும் அழகான ஒரு நட்புறவு மலரும். இந்த நுழைவு, தேவையற்ற ஒரு குறுக்கீடாக அமைந்தால், பிரச்சனைகள் என்ற களைகள், வெட்ட, வெட்ட வளரும்.

உரிமையோடு சீமோனின் படகில் நுழைந்த இயேசு, சீமோனின் வாழ்விலும் நுழைந்தார். புதுமையை ஆரம்பித்து வைத்தார். தன் படகிலிருந்து இயேசு போதித்தவற்றை, சீமோனும் கேட்டார். இரவு முழுவதும் முயற்சிகள் செய்தும், மீன்பிடிப்பு இல்லையே என்ற தன் கவலைகளில் மூழ்கியிருந்த சீமோனின் உள்ளத்தில், இயேசுவின் வார்த்தைகள் மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்தன.

சீமோனின் படகை தன் பிரச்சார மேடையாகப் பயன்படுத்திவிட்டு, இயேசு அவர் வழியே போயிருந்தால், புதுமை தொடர்ந்திருக்காது. தன் சொந்த பயனுக்காக மற்றவரைப் பயன்படுத்திவிட்டு பிறகு மறைந்து போகும் பழக்கம், இயேசுவுக்குக் கிடையாது. சீமோனின் படகில் ஏறியது மட்டுமல்லாது, அதை, கரையிலிருந்து ஏரிக்குள் கொண்டு செல்லக் கட்டளையிடுகிறார்.

"ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போகும்படி" (லூக்கா 5:4) இயேசு கட்டளையிடுகிறார். அவ்விதம் ஆழத்திற்குச் செல்லும் படகில் அவரும் உடன் இருக்கிறார். ஆழத்திற்குச் செல்வது, எளிதான காரியம் அல்ல... ஆழத்திற்குச் செல்வதற்கு, ஏகப்பட்டத் தயக்கங்கள் நமக்குள் எழலாம். குறிப்பாக, எதையும் மேலோட்டமாகச் சிந்திப்பதும், 'மேம்புல் மேயும்' மனநிலையுடன் வாழ்வதும் சிறந்ததெனக் கூறும் இன்றையப் பாடங்களுக்கு எதிராக, எதையும், ஆழ, அறிந்து செயல்படுவதற்கும், ஆழமான அர்ப்பண உணர்வுடன் வாழ்வதற்கும், தனிப்பட்டத் துணிச்சல் தேவை. மேலும், ஆழத்திற்குச் செல்லுமாறு பணிக்கும் ஆண்டவன் நம்மோடு வரும்போது, துணிந்து செல்ல முடியும். அத்தகைய நம்பிக்கைக்காக செபிப்போம்.

முன்பின் தெரியாத தன்னை நம்பி, தனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு, படகை ஆழத்திற்குக் கொண்டு சென்ற சீமோனின் எளிய, வெள்ளை உள்ளம் இயேசுவைக் கவர்ந்திருக்கவேண்டும். தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் கள்ளமற்ற உள்ளங்களை, சொந்த இலாபங்களுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இயேசுவின் எண்ணங்கள் வேறுபட்டவை. சீமோனை இன்னும் தன் வயப்படுத்த, அவர் வழியாக இன்னும் பலரைத் தன் வயப்படுத்த நினைத்தார் இயேசு. அவரை மனிதரைப் பிடிப்பவராக்குவதற்கு முன், புது வழியில் மீன்பிடிக்கும் வழியை சொல்லித் தர விழைந்த இயேசு, ஏரியில் வலைகளை வீசச் சொன்னார்.

இயேசு விடுத்த இந்தக் கட்டளையைக் கேட்டு, சீமோனும், அவரைச் சுற்றியிருந்தோரும் அதிர்ச்சியும், எரிச்சலும் அடைந்திருக்கலாம். மீன்பிடிக்கும் தொழிலில் பல ஆண்டுகள் ஊறி, தேர்ந்த அவர்களது திறமையையும், அனுபவத்தையும் கேலி செய்வது போல் இருந்தது, இயேசுவின் கட்டளை. சீமோன் நினைத்திருந்தால், இயேசுவிடம் இப்படி சொல்லியிருக்கலாம்: "ஐயா, இந்தப் பகல் நேரத்தில் நாங்கள் வலை வீசினால், பார்ப்பவர்கள் எங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்வார்கள். உங்கள் ஆலோசனைக்கு நன்றி. என்ன செய்வதென்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று, பேதுரு, தன் நிலைப்பாட்டை, நல்லவிதமாகக் கூறியிருக்கலாம்; மாறாக, கள்ளம் கபடமற்ற சீமோன், தன் இயலாமையையும், இயேசுவின் மீது தனக்கு உருவாகியிருந்த நம்பிக்கையையும் இவ்விதம் சொல்கிறார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். (லூக்கா 5:5) பல நல்ல பாடங்கள் இந்தக் கூற்றில் புதைந்துள்ளன. உண்மையை எவ்விதப் பூச்சும் இல்லாமல் சொல்வது; சொல்பவரது பின்னணியைப் பற்றி எடைபோடாமல், அவர் சொல்வதற்கு மதிப்பு கொடுப்பது... இப்படி பல பாடங்கள். சீமோனின் நம்பிக்கை வீண்போகவில்லை. 'வலைகள் கிழியும் அளவுக்கு' மீன்கள், அந்தப் பகல் நேரத்தில் பிடிபட்டன.

மீன்பிடிப்பைக் கண்டதும், சீமோனின் சொல்லும், செயலும் ஆச்சரியத்தைத் தருகின்றன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். (லூக்கா நற்செய்தி  5:8)

புனித பேதுரு மட்டுமல்ல, இறைவாக்கினர் எசாயா, திருத்தூதர் பவுல் என்ற மூன்று விவிலியத்தூண்களும் உள்ளத் தாழ்ச்சியோடு தங்களைப்பற்றிக் கூறும் வார்த்தைகளை இன்றைய ஞாயிறு வாசகங்கள் தாங்கி வருகின்றன.

முதல் வாசகத்தில் இறைவனின் மாட்சியைக் கண்ணாரக் கண்டு எசாயா கூறும் வார்த்தைகள் இவை: தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான். தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான். (எசாயா 6:5)

இரண்டாம் வாசகத்தில், இயேசு, திருத்தூதர்கள் பலருக்குக் காட்சியளித்ததை வரிசைப்படுத்திச் சொல்லும் பவுல், இறுதியாக, தனக்கும் அவர் தோன்றினார் என்பதை, இவ்வாறு கூறுகிறார்: எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். (1 கொரி. 5:8)

எசாயா, பவுல், பேதுரு என்ற மூவருமே தங்களைப்பற்றி கொண்டிருந்த உண்மையானத் தெளிவிலிருந்து பேசிய வார்த்தைகள் இவை. தன்னிரக்கத்தில், வேதனையில், இயலாமையில் தங்களையே வெறுத்து, தங்களையே தாழ்த்திச் சொன்ன வார்த்தைகள் அல்ல. இது நமக்குத் தரும் முக்கியமான பாடம்: தாழ்ச்சி அல்லது, பணிவு என்பது, உள்ள நிறைவிலிருந்து, உண்மையானத் தெளிவிலிருந்து வரும்போதுதான் உண்மையாக இருக்கும், உண்மையாக ஒலிக்கும் என்ற பாடம்.

தன்னிறைவு, தன்னைப்பற்றிய தெளிவு, தன்னைப் பற்றிய உண்மையான பெருமை இவை இல்லாதபோது, அடுத்தவர்களை எப்போதும் நமக்குப் போட்டியாக நினைப்போம். இந்தப் போட்டியைச் சமாளிக்க, ஒன்று நம்மையே அதிகமாகப் புகழ வேண்டியிருக்கும் அல்லது, மிகவும் பரிதாபமாக போலித் தாழ்ச்சியுடன், போலிப் பணிவுடன் நடிக்க வேண்டியிருக்கும்.

அகந்தையில் சிக்கி, கிறிஸ்தவர்களை அழித்து வந்த சவுல், இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, திருத்தூதர் பவுலாக மாறியபின், உண்மையான உள்ள நிறைவோடும், பெருமையோடும், அதே நேரம் பணிவோடும் சொன்ன வார்த்தைகள் நமது சிந்தனைகளை இன்று நிறைவு செய்யட்டும்.

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 12: 9-10

கிறிஸ்து என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்: வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார். ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.