2016-02-05 15:12:00

திருத்தந்தை பிரான்சிஸ், ஜாம்பிய அரசுத்தலைவர் சந்திப்பு


பிப்.05,2016. ஜாம்பியா அரசுத்தலைவர் Edgar Chagwa Lungu அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்து உரையாடிய  பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் மற்றும் திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் பால் கெல்லகெர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

ஜாம்பியா நாட்டுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நல்லுறவுகள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்த திருப்தியும், அந்நாட்டின் பொது நலனுக்கு, குறிப்பாக, கல்வி, நலவாழ்வு மற்றும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு தலத்திருஅவை ஆற்றி வரும் சிறப்பான பணிகள் குறித்த பாராட்டும் இச்சந்திப்புக்களில் தெரிவிக்கப்பட்டன.

கலாச்சார உரையாடல் வழியாக, மதங்கள் மத்தியிலும், சமூகத்திலும் அமைதியான நல்லிணக்கம் ஏற்படுவதற்கும், சமூகத்தில் ஏழ்மை மற்றும் சமத்துவமின்மையை அகற்றுவதற்கும் தலத்திருஅவையும் அரசும் இணைந்து ஆற்றும் பணிகள் பற்றியும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதென திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் இடம்பெறும் சண்டைகள் மற்றும் அப்பகுதிகளில்  இடம்பெறும் அமைதிக்கான முயற்சிகளும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன.

ஆப்ரிக்காவின் தென் பகுதியிலுள்ள ஜாம்பியா நாடு, 1964ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்தது. கிறிஸ்தவம் இந்நாட்டின் அரசு மதமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.