2016-02-05 15:41:00

காற்றை அதிகம் சுத்தம் செய்வது இளைய மரங்கள்


பிப்.05,2016. பருவமழைக் காடுகளில் புதிதாக வளர்ந்துள்ள மரங்கள், அக்காடுகளிலுள்ள மூத்த மரங்களைவிட 11 மடங்கு, புவி மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை அதிகம் உள்ளிழுக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

இலத்தீன் அமெரிக்க வெப்பமண்டலக் காடுகளில் புதிதாக வளர்ந்துவரும் மரங்கள், அங்குள்ள மூத்த மரங்களைவிட மிகுந்த பலனளிக்கின்றன என்று, அக்காடுகளில் ஆய்வு நடத்திய நெதர்லாந்து அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெருமளவில் மரங்கள் வெட்டப்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் இலத்தீன் அமெரிக்க வெப்பமண்டலக் காடுகளில் ஆய்வு நடத்திய அறிவியலாளர்கள், மூத்த மரங்கள் பெருமளவான கரியமிலவாயுவை உள்வாங்கியிருப்பதால் அவைகளும் பாதுகாக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளனர்.

காலாகாலமாக மனிதரின் கைபடாமல் இருந்துவரும் காடுகளைவிட, புதிதாக வளர்ந்து வரும் காடுகள் பதினோரு மடங்கு அதிகமான கரியமிலவாயுவை, உள்வாங்கிக் கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.

மனிதப் பயன்பாட்டுக்காக மரங்கள் வெட்டப்பட்ட காடுகளில் மீண்டும் மரங்களை வளர்ப்பது, புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு இதுவரை நினைத்து வந்ததைவிட மிகவும் அவசியம் என்றும் இந்த ஆய்வு காட்டுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் ‘தி நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளன. 

ஆதாரம் : பிபிசி/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.