2016-02-05 15:27:00

இது இரக்கத்தின் காலம் : இரக்க குணத்தை, பேராசையால் சோதியாதீர்


மதிய வேளை, கடுமையான வெயில். அப்போது ஒரு வழிப்போக்கர், காலில் செருப்பு கூட இல்லாமல் மிகவும் சோர்வடைந்த நிலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே குதிரை மீது ஒருவர் வந்து கொண்டு இருந்தார். குதிரையில் வந்தவர் செருப்பு அணிந்து, கையில், விரிக்காத குடையும் வைத்திருந்தார். இதை பார்த்த வழிப்போக்கர் ‘அய்யா, நான் நீண்ட நேரம் இந்த வெயிலில் வந்ததால் மிகுந்த களைப்பாக உள்ளது. நீங்கள் குதிரையில் செல்கிறீர்கள், அதனால் உங்களுக்கு இந்த செருப்பு தேவைப்படாது. எனக்கு கொடுத்து உதவலாமே’ என்றார். சிறிது யோசித்த குதிரைக்காரர், செருப்பைக் கழட்டிக் கொடுத்தார். பின்பு வழிப்போக்கர், ‘ஐயா, நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது. நீங்கள் குதிரையில் விரைவாக சென்று விடுவீர்கள். அதனால், அந்த குடையும் கொடுத்தால் நல்லா இருக்கும்’ என்றார். ‘சரி, நீங்கள் சொல்வதும் சரிதான்’ என்று குடையும் தந்துவிட்டு சற்று நகர்ந்தார். உடனே வழிப்போக்கர், ‘ஐயா’ என்று கூப்பிட்டு சற்று தயக்கமாக நின்றார். குதிரைக்காரரோ, ‘என்ன?’ என கேட்டார். வழிப்போக்கர், சற்று தயங்கியவாறு, ‘ஐயா, நான் இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஏற்கனவே நடந்து களைப்பாக உள்ளேன். நீங்கள் களைப்பின்றி இருப்பதால், உங்களால் நடக்க முடியும். அதனால் உங்க குதிரையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்றார். உடனே அந்த குதிரைக்காரருக்கு கோபம் வந்தது. குதிரையை ஓட்ட பயன்படுத்திய சாட்டையால் வழிப்போக்கரை சரமாரியாக அடித்தார். அப்போது அந்த வழிப்போக்கர் திடீர் என சிரிக்க ஆரம்பித்தார். குதிரைக்காரர், ‘ஏன் சிரிக்கிறாய்’ என கேட்டதற்கு, ‘இல்லை ஐயா, நான் செருப்பையும், குடையையும் கேட்டபோது, உடனே கொடுத்தீர்கள். நீங்கள் சென்ற பிறகு என் மனதில் ஒரு தவிப்பு இருந்திருக்கும். செருப்பையும், குடையையும் கொடுத்த நீங்கள், கேட்டிருந்தால் குதிரையும் கொடுத்திருப்பீர்களோ என என் மனதில் ஒரு தவிப்பு இருந்திருக்கும். அது இப்போது நீங்கி விட்டது. அதோடு, என் ஆசைக்கும் ஓர் எல்லை உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்’ என்றார்.

இரக்க குணத்தை, பேராசை கொண்டு சோதிக்காதீர்கள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.