2016-02-04 16:25:00

பசியால் வாடும் குழந்தைகள் சார்பில் கர்தினால் தாக்லே செய்தி


பிப்.04,2016. நாம் வழங்கும் சிறு கொடையும் உணவின்றி வாடும் குழந்தைகளை பெருமளவு காப்பாற்றும் என்று பிலிப்பைன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தன் தவக்காலச் செய்தியில் கூறியுள்ளார்.

மணிலா பேராயரான கர்தினால் தாக்லே அவர்கள், இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு தனிப்பட்ட முயற்சியாக, பசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவிகள் செய்யும்படி விண்ணப்பித்து, தவக்காலச் சுற்று மடலை அனுப்பியுள்ளார்.

‘Pondo ng Pinoy’ என்ற பெயரில் குழந்தைகளுக்கு உணவு அளித்து வரும் ஒரு திட்டத்திற்கு ஒவ்வொருவரும் சிறு தொகையை அளித்தாலும், அது, பல்லாயிரம் குழந்தைகளைக் காப்பாற்றும் என்று, கர்தினால் தாக்லே அவர்கள், புள்ளிவிவரங்களுடன் விண்ணப்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தவக்காலத் தொகையால் 21,000 குழந்தைகள் பயன்பெற்றனர் என்றும், இவ்வாண்டு மக்களின் உதவியுடன் 25,000 குழந்தைகளுக்கு உணவளிப்பது இலக்கு என்றும் கர்தினால் தாக்லே அவர்களின் மடல் சுட்டிக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு திரட்டப்பட்ட நிதி, 3,30,000 அமெரிக்க டாலர்கள் என்றும், இத்தொகையில் பெரும்பாலான பகுதி, மணிலா உயர் மறைமாவட்டத்தின் கொடை என்றும் ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.