2016-02-04 16:31:00

திருத்தந்தை பிரான்சிஸ் பங்கேற்கும் திரைப்படம்


.பிப்.04,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு திரைப்பட நடிகர் அல்ல, அவர் கலந்துகொள்ளும் சில நிகழ்வுகள், வரவிருக்கும் ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் என்று, வத்திக்கான் ஊடகத் துறையின் பொறுப்பாளர், அருள்பணி Dario Edoardo Viganò அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு சில ஊடகங்களில் வெளிவந்த செய்திகளுக்குப் பதில் அளிக்கும் வகையில், அருள்பணி Viganò அவர்கள் இவ்விளக்கத்தை அளித்தார்.

AMBI என்ற பெயர் கொண்ட திரைப்பட நிறுவனத்தினர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், விவிலியப் பகுதிகளை, குறிப்பாக, இயேசுவின் உவமைகளை குழந்தைகளுக்கு தகுந்த வகையில் விளக்கும் திரைப்படங்களை உருவாக்குமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின் இக்கருத்தை ஏற்றுக்கொண்ட AMBI திரைப்பட நிறுவனம், ஒரு குடும்பத்தை மையப்படுத்தி, “Beyond the Sun” என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

இத்திரைப்படத்தில் திருத்தந்தையின் செயல்பாடுகள் அடங்கிய ஒரு சில காட்சிகள் இடம்பெறும் என்றும், திரைப்படத்திற்காக திருத்தந்தை நடிக்கவில்லை என்றும் அருள்பணி Viganò அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு துவக்கத்தில் இத்தாலியில் இடம்பெறும் என்றும், இத்திரைப்படத்தினால் திரட்டப்படும் தொகை, அர்ஜென்டீனா நாட்டில் மிகுந்த இடர்பாடுகளுக்கிடையே வாழ்ந்துவரும் குழந்தைகள், மற்றும் இளையோரின் நலனுக்கேனப் பயன்படுத்தப்படும் என்றும் AMBI நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர். 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.