2016-02-04 16:12:00

திருத்தந்தை: அறிஞனாக நான் மெக்சிகோ நாட்டிற்கு வரவில்லை


பிப்.04,2016. பரிசுப்பொருள்களையும், அறிவுரைகளையும், பிரச்சனைகளுக்குத் தீர்வுகளையும் சுமந்து வரும் ஓர் அறிஞனாக நான் மெக்சிகோ நாட்டிற்கு வரவில்லை, மாறாக, மெக்சிகோ மக்களிடம் உள்ள உன்னத கருத்துக்களை கற்றுக்கொள்ள வரும் ஒரு திருப்பயணியாக வருகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்ட ஒரு காணொளி செய்தியில் கூறினார்.

பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மெக்சிகோ நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் இத்தருணத்தில், அந்நாட்டின் நோடிமெக்ஸ் (Notimex) என்ற ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு தொலைக் காட்சி நிகழ்வில், திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

மெக்சிகோ நாட்டின் சிறுவர் சிறுமியர் பலர் இணைந்து எழுப்பியிருந்த பல கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அமைந்திருந்த திருத்தந்தையின் காணொளி செய்தி, இப்புதன் மாலை அந்நாட்டில் ஒளிபரப்பானது.

நீங்கள் ஏன் மெக்சிகோ நாட்டிற்கு வருகிறீர்கள்? மெக்சிகோ நாட்டிற்கு என்ன கொண்டு வருகிறீர்கள்? என்று குழந்தைகள் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிக்கும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அந்நாட்டிற்கு ஒரு திருப்பயணியாக வருவதாகக் கூறினார்.

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக அவர் மெக்சிகோ நாட்டின் பாதுகாவலரான குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலத்திற்குச் செல்வது குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதில் அளித்தத் திருத்தந்தை, குவாதலூப்பே அன்னை மரியாவை தான் இருமுறை சென்று தரிசித்த அனுபவத்தை எடுத்துரைத்தார்.

குவாதலூப்பே அன்னை மரியாவை எண்ணிப் பார்க்கும்போது, பாதுகாப்பு, கனிவு ஆகிய எண்ணங்களே தன் மனதில் தோன்றுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, அந்த அன்னை, மெக்சிகோ மக்களை கனிவுடன் பாதுகாக்க வேண்டும் என்று செபிக்கவே தான் அத்திருத்தலம் செல்லவிருப்பதாகக் கூறினார்.

தங்கள் நாட்டில் நிலவிவரும் வன்முறைகளை எவ்விதம் சந்திக்கவேண்டும் என்று குழந்தைகள் எழுப்பிய ஒரு கேள்விக்குப் பதில் அளித்தத் திருத்தந்தை, வன்முறையின் பல வடிவங்கள் உலகெங்கும் உள்ளன என்றும், வயது வந்தவர்கள் மேற்கொள்ளும் வன்முறைகளால், சிறுவர், சிறுமியரே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

'உங்கள் வருகை, எங்களுக்கு அமைதியை கொண்டுவருவதாக' என்று ஒரு குழந்தை எழுப்பியிருந்த விண்ணப்பத்தை சிறப்பாகக் குறிப்பிட்டத் திருத்தந்தை, அமைதி என்பது நாம் அனைவருமே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலை என்றும், தான் மெக்சிகோ மக்களுடன் இணைந்து, அமைதிக்காக செபிக்கவே அந்நாட்டிற்கு வருவதாகவும் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.