2016-02-04 16:10:00

உலகில் மிக உயரமான மணிகாட்டி கோபுரம், மைசூருவில்


பிப்.04,2016. உலகிலேயே மிக உயரமான தனித்து நிற்கும் மணிகாட்டி கோபுரத்தை கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி மையத்தில் அமைக்கவிருப்பதாக இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் (Infosys) தெரிவித்துள்ளது.

மைசூருவில் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வி மைய வளாகத்தில் தனித்து நிற்கும் இந்தக் கோபுரம் அமைக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 135 மீட்டர் உயரத்தைக் கொண்டதாக இருக்கும் இந்தக் மணிகாட்டி கோபுரத்தின் அடித்தளம் 22 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும்.

இதுவரை, உலகின் மிக உயரமான தனித்து நிற்கும் பெரிய மணிகாட்டி கோபுரமாகக் கருதப்படும் இலண்டன், பிக் பென் (Big Ben) மணிகாட்டி கோபுரம், 96 மீட்டர் உயரமே உடையது என்ற நிலையில், இந்தப் புதிய கோபுரம் அதைக் காட்டிலும் 40 மீட்டர் கூடுதல் உயரம் கொண்டதாக அமையும்.

முட்களுக்கு பதிலாக டிஜிடல் முறையில் நேரம் காட்டும் இந்த மணிகாட்டி கோபுரம், சுமார் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்றும், 20 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதி பகுதியாக இந்தக் கோபுரம் செய்யப்பட்டு, மைசூருவில் பொருத்தப்படவுள்ளது. 

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.