2016-02-03 16:02:00

புதன் மறைக்கல்வி உரை – அப்பழுக்கற்ற நீதிபதியுமாவார் இறைவன்


பிப்.,03,2016.  இரக்கத்தின் யூபிலி ஆண்டையொட்டி, இறைஇரக்கம் குறித்த புதிய தொடரை ஆரம்பித்து, ஒவ்வொரு புதன்கிழமையும் மறைக்கல்வி உரையில், இறை இரக்கத்தின் பல்வேறு கூறுகள் குறித்து விளக்கமளித்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், இறைவனின் நீதி குறித்து எடுத்துரைத்தார்.

திருநூல்கள் இறைவனை, 'முடிவற்ற கருணை' என நமக்குக் காண்பிக்கின்றன. அதேவேளை, அப்பழுக்கற்ற நீதிபதி எனவும் காட்டுகின்றன. நீதி என்று நோக்கும்போது, நீதியான நிர்வாகத்தை, அதாவது நியாயமாகப் பகிர்ந்தளிப்பதையும், தண்டனையையும் குறித்து நம் எண்ணம் செல்கிறது. இந்த சட்ட ரீதியான நீதி என்பது, தீமையை வெற்றி கொள்வதில்லை, மாறாக, அதன் ஆக்கிரமிப்பைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் பரவாமல் தடுக்கிறது. விவிலியமோ, உண்மை நீதி என்பதை, தீர்ப்பாயத்தை நாடிச் செல்ல தேவையில்லாத ஒரு நிலையாகக் காட்டுகிறது. குற்றமிழைக்கப்பட்டவர்கள் நேரடியாக, குற்றமிழைத்தவரை நாடிச்சென்று, இழைத்துள்ள தீமையை அவர் கண்டுணரவும், மனக்குரலுக்கு அவர் செவிமடுப்பதற்கும் உதவி, அவரை மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் வழிமுறையாக உள்ளது. இதன் வழியாக, தவறிழைத்தவர் தாங்கள் இழைத்த தவறைப் புரிந்துகொள்ளவும், தனக்கு வழங்கப்படும் மன்னிப்பை ஏற்கவும் வழி பிறக்கிறது. இவ்வாறே, குடும்பங்கள் மன்னிப்பதும், தம்பதியரும் குழந்தைகளும் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதும் இடம்பெறுகிறது. இது எளிதான ஒரு செயல் அல்ல.

இத்தகைய செயலுக்கு, நாம் பிறரை மன்னிக்கத் தயாராக இருப்பதும், நமக்குத் தீமை இழைத்தவர்களின் மீட்பில் நாம் ஆர்வம் கொண்டிருப்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதுவே கடவுளின் நீதி. நமக்குரியத் தண்டனைத் தீர்ப்பை அல்ல, மாறாக, நம் மீட்பையே அவர் விரும்புகிறார். நாம் இழைத்த தீமைகளை நாம் பார்க்க வைப்பதன் மூலம், இயேசு கிறிஸ்துவில் இறைத்தந்தை வெளிப்படுத்திய கருணையின் தேவையை உணர, இறைவன் நமக்கு உதவுகிறார். இறைவனின் நீதி என்பது, அவரின் கருணையே. கடவுளின் குழந்தைகளாகிய நாம், இறை இரக்கத்திற்கு நம்மைத் திறந்தவர்களாக இருப்பதோடு, அதனை தராளமனதுடனும், தாமதமின்றியும் நம் சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்துகொள்ளவும் முன்வருவோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.