2016-02-03 16:41:00

திருத்தந்தை-தனி வரங்களை கொள்கைத் திரட்டாக பூட்டிவைப்பது தவறு


பிப்.03,2016. அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுப்போர், நேருக்கு நேர் சந்திக்கும் அருளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் மாலை நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார்.

ஆண்டவரை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கும் திருநாள், மற்றும் அர்ப்பணிக்கப்பட்டோர் ஆண்டின் இறுதி நாள் இரண்டையும் கொண்டாடும் வகையில், பிப்ரவரி 2, இச்செவ்வாயன்று மாலை, புனித பேதுரு பசிலிக்காவில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு என்ற நிலைக்கு ஒருவர் பெறும் அழைப்பு, இறைவனின் கொடையே அன்றி, ஒருவர் திட்டமிட்டு மேற்கொள்ளும் வாழ்வு அல்ல என்று கூறினார்.

பிப்ரவரி 2ம் தேதி கொண்டாடப்படும் திருநாள், முகமுகமாய்ச் சந்திக்கும் திருநாள் என்று கீழை வழிபாட்டு முறையில் வழங்கப்படுகிறது என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருநாளன்று வாசிக்கப்பட்ட நற்செய்தியில் குழந்தை இயேசுவைச் சந்தித்த சிமியோன், அன்னா ஆகிய இருவரையும் இறை சந்திப்பின் அடையாளங்கள் என்று கூறினார்.

ஒவ்வொரு துறவு சபையையும் உருவாக்கியவர்கள், பல்வேறு எதிர்ப்புக்கள் நடுவே தங்கள் பணிகளைத் தொடர்வதற்காக, தங்கள் கரங்களை அழுக்காக்கிக் கொள்ளத் தயங்கவில்லை என்பதை வலியுறுத்தியத் திருத்தந்தை, அவர்கள் வழியே நாம் பெற்றுள்ள தனி வரங்களை ஒரு கொள்கைத் திரட்டாக பூட்டி வைப்பது தவறு என்று எடுத்துரைத்தார்.

இறைவனை மனிதர்களுக்கு வழங்கவேண்டும் என்ற ஆவலால் பற்றியெரிந்த சபை நிறுவனர்கள், அந்த ஆவலை நிறைவேற்றும் வரை, நிலைகொள்ளாமல் தவித்த இறைவாக்கினர்கள் போல செயல்பட்டனர் என்பதை, சிறப்பாகக் குறிப்பிட்டார், திருத்தந்தை.

அர்ப்பணிக்கப்பட்டோர் என்ற முறையில் நமக்குள் நாமே நிறைவைக் கண்டு, மனங்களை மூடிவிடாமல், மனித குலத்தைச் சந்திப்பதற்கு நம்மைவிட்டு வெளியேறுவதே இந்த வாழ்வின் பொருள் என்று தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

திருப்பலியின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித முன்னறிவிப்புமின்றி, புனித பேதுரு பசிலிக்காவிற்கு வெளியே கூடியிருந்த இருபால் துறவியரைச் சந்திக்க வெளியே வந்தது, கூடியிருந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அங்கு கூடியிருந்தோருடன் சில நிமிடங்கள் பேசியத் திருத்தந்தை, அர்ப்பணிக்கப் பட்டோர் ஆண்டினை இவ்வளவு ஆர்வமாக நிறைவேற்றியுள்ள அனைத்து துறவியருக்கும் வாழ்த்துக்களைக் கூறியதோடு,  தங்கள் ஆர்வத்தில் குன்றாமல் வாழும்படி அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.