2016-02-03 17:08:00

எண்ணிக்கை அல்ல இறை நம்பிக்கையே முக்கியம்-கர்தினால் பரோலின்


பிப்.03,2016. நாம் ஒவ்வொருவரும் நம்மை மீண்டும் மீண்டும் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே, குழந்தை இயேசுவைக் காணிக்கையாகத் தந்த திருநாள் நமக்கு நினைவுறுத்துகிறது என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் நிறைவு நாளைக் கொண்டாட, சுலோவேனியா நாட்டின் லூப்ளியானா (Ljubljana) பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைக் குறித்து புனித ஜெரோம், அசிசி நகர் புனித பிரான்சிஸ், புனித ஆஞ்செலா மெரிசி போன்றோர் கூறியுள்ள கருத்துக்களை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார், கர்தினால் பரோலின்.

மேலும், சுலோவேனியா நாட்டில், கிறிஸ்தவ வாழ்வை ஆணித்தரமாகப் பதிக்க அயராது உழைத்த பல்வேறு துறவு சபைகளை, கர்தினால் பரோலின் அவர்கள், தன்  மறையுரையில் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.

ஐரோப்பிய நாடுகளில் குறைந்துவரும் இறை அழைத்தல் எண்ணிக்கை குறித்தும், வயதான துறவியரின் எண்ணிக்கை கூடிவருவது குறித்தும் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திக்கும் துணிவைப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நமது எண்ணிக்கையிலும், ஆற்றியப் பணிகளின் வெற்றிகளிலும் நம்பிக்கை கொள்ளாமல், இறைவனில் நம்பிக்கை கொள்வதே முக்கியம் என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.