2016-02-02 16:07:00

வத்திக்கான் அரிய கலைப்பொருள்கள் தாய்பேய் அருங்காட்சியகத்தில்


பிப்.02,2016. உலகில் மிகப்பெரிய அருங்காட்சியகங்களுள் ஒன்றான, தாய்வான் நாட்டிலுள்ள தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில்(NPM) திருப்பீடத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மிக அழகான கலைப்பொருள்களை வைத்து சிறப்பு காட்சியகம் ஒன்று இச்செவ்வாயன்று திறக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் திருவழிபாட்டு அலுவலகமும், தாய்வான் தேசிய அரண்மனை அருங்காட்சியகமும் இணைந்து அமைத்துள்ள இந்தச் சிறப்பு அருங்காட்சியகம், வருகிற மே 2ம் தேதி வரை பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை அருளாளர் 9ம் பத்திநாதர் அவர்களின் தலைப்பாகை, திருத்தந்தை 11ம் பத்திநாதர் அவர்கள் பயன்படுத்திய திருப்பலி உடைகள், புனித பிரான்சிஸ் சேவியர் திருப்பண்டம், கிறிஸ்துவின் திருமுகம், சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட, தொடக்க காலச் சீன மறைப்பணியாளர்களின் எழுத்துக்கள், எடுத்துக்காட்டாக, விசுவாசத்தைப் பண்பாட்டுமயமாக்குதல் குறித்த மறைப்பணியாளர்களின் அறிக்கைகள் உட்பட, வத்திக்கானின் மிக அழகான கலைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருஅவையின் திருவழிபாடு, திருத்தந்தை, கத்தோலிக்கத்தின் வரலாறு, வளர்ச்சி ஆகியவைகளுக்கு இடையேயுள்ள நெருங்கிய தொடர்பை விளக்கும் கலைப்பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன.

தாய்வான் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில், சீனாவின் பழங்கால அடையாளங்கள் அதிகமாக உள்ளன. 

ஆதாரம் : Asianews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.