2016-02-02 15:54:00

திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்க அழைப்பு


பிப்.02,2016. சிறாரைப் புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து காப்பாற்றும் நோக்கத்தில், திரைப்படங்களில், புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்குமாறு, திரைப்படத் தயாரிப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது WHO உலக நலவாழ்வு நிறுவனம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், புதிதாகப் புகைப்பிடிக்கும் வளர்இளம் பருவத்தினரில் 37 விழுக்காட்டினர் திரைப்படங்களில் புகைப்பிடிப்பவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன என்று, WHO நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிர்வாகி Armando Peruga அவர்கள் கூறினார்.

2014ம் ஆண்டில் எடுத்த ஆய்வின்படி, அறுபது இலட்சத்துக்கு மேற்பட்ட வளர்இளம் பருவத்தினர், திரைகளில் புகைப்பிடிப்பதைப் பார்த்து புகைப்பிடிக்கத் தொடங்கியவர்கள் எனவும், இவர்களில் இருபது இலட்சம் பேர் புகையிலை தொடர்புடைய நோய்களால் இறப்பார்கள் எனவும் அஞ்சப்படுவதாக, Peruga அவர்கள் கூறினார்.

ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களிலும், ஆறு ஐரோப்பிய மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தயாரிக்கப்படும் முதலிடங்களை வகிக்கும் திரைப்படங்களிலும்  புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன என்றும் Peruga அவர்கள் கூறினார்.

இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் குறைந்து வந்தன, ஆனால் 2013, 2014ம் ஆண்டுகளில் இவை அதிகரித்துள்ளன என்றும் கூறும் Peruga அவர்கள், வாகனங்களில் சிறாரோடு அல்லது கர்ப்பிணிப் பெண்களோடு பயணம் மேற்கொள்ளும்போது புகைப்பிடிப்பதை உலக நலவாழ்வு நிறுவனம் தடைசெய்துள்ளது என்றும் கூறினார். 

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.