2016-02-02 15:27:00

இது இரக்கத்தின் காலம் : 'கண்ணுக்கு கண்' - உலகம் குருடாகும்


2004ம் ஆண்டு, ஈரான் நாட்டில் நிகழ்ந்த ஒரு துயரநிகழ்வு இது. தன் காதலை நிராகரித்த அமேனே (Ameneh Bahrami) என்ற இளம்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசினார் மஜீத் (Majid Movahedi) என்ற இளைஞர். இதனால், இளம்பெண் அமேனேயின் முகமெல்லாம் எரிந்துபோய், அவர் தன் இடது கண்ணில் பார்வை இழந்தார். 2011ம் ஆண்டு, இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, உலகை அதிர்ச்சியடையச் செய்தது. இளம்பெண் அமேனே, அமில வீச்சினால் தன் இடது கண் பார்வையை இழந்தது போலவே, மஜீத்தின் இடது கண்ணிலும் அமிலம் ஊற்றப்பட்டு, அவரும் பார்வை இழக்கவேண்டும் என்பதே அத்தீர்ப்பு. நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்புக்கு இளம்பெண் அமேனே முதலில் துணைபோனார் என்பது உண்மை.

இத்தீர்ப்பை செயல்படுத்தக்கூடாது என்று உலகின் பல அரசுகளும், மனிதாபிமான அமைப்புக்களும் விண்ணப்பித்தாலும், ஈரான் அரசு தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. சிறை அதிகாரிகள், 2011ம் ஆண்டு மேமாதம் ஒரு நாள், இத்தீர்ப்பை நிறைவேற்ற, மஜீத்துக்கு மயக்க மருந்தை முதலில் கொடுத்தனர். அவர் மயக்கத்தில் இருந்த நேரம், அமில வீச்சில் கண்ணிழந்த இளம்பெண் அமேனே அவர்கள், அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று விண்ணப்பித்ததால், மஜீத்தின் கண்களில் அமிலம் ஊற்றப்படவில்லை. இளம்பெண் அமேனே அவர்களின் அகக் கண்கள் திறந்ததால், மஜீத்தின் முகக் கண்கள் காப்பாற்றப்பட்டன.

'கண்ணுக்கு கண்' என்று வாழும் இவ்வுலகப் போக்கிற்கு மாற்றுச் சாட்சியங்களாக, அமேனே போன்ற இளம்பெண்கள் 'மன்னிப்பு' பாடங்களைச் சொல்லித் தருவதால், இவ்வுலகம் இன்னும் முழுமையாகக் குருடாகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.