2016-02-01 16:17:00

தொழுநோயாளர்க்கு தோழமையுணர்வு காட்டப்பட வேண்டும்


பிப்.01,2016. இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், இந்நாளில் கடைப்பிடிக்கப்பட்ட உலக தொழுநோயாளர் நாள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நோய் தற்போது குறைந்து வந்தாலும், ஏழைகளை இந்நோய் இன்னும் தாக்கி வருகிறது என்று கூறினார்.

தொழுநோயால் மாற்றுத்திறனாளிகளாகியுள்ள சகோதர, சகோதரிகளுக்குத் தோழமையுணர்வு காட்டப்படும்படியாக விண்ணப்பித்த திருத்தந்தை, இந்நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினர்க்குத் தனது வாழ்த்தையும், ஊக்கத்தையும் தெரிவித்தார்.

இன்னும், இந்த மூவேளை செப உரையில் கலந்துகொண்ட உரோம் மறைமாவட்ட கத்தோலிக்க கழகச் சிறுவர், சிறுமியருக்குத் தனது சிறப்பு வாழ்த்தைத் தெரிவித்த திருத்தந்தை, அவர்கள் தங்களையொத்த வயதினர் மத்தியில், அமைதி மற்றும் இரக்கத்தின் கருவிகளாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் திருத்தந்தைக்கு அருகில் நிற்க, சிறுமி திருத்தந்தைக்கென செய்தி ஒன்றை வாசித்தார். பின்னர், திருத்தந்தையும், தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். இறுதியில் அமைதியின் அடையாளமாக பல வண்ணங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.