2016-02-01 16:30:00

திருத்தந்தை - மனத்தாழ்மை, தூய வாழ்வின் பாதையாகும்


பிப்.01,2016. மனத்தாழ்மை, தூய வாழ்வின் பாதையாகும் என்று, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது பாவத்தை உணர்ந்து, ஆண்டவரில் கொண்டுள்ள நம்பிக்கையில், அதை மனத்தாழ்மையோடு ஏற்ற அரசர் தாவீது பற்றிய கதையை விளக்கும் இத்திங்கள் திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுள் பாவத்தை மன்னிக்கும்வேளை, தீமையில் ஊறிப்போன இதயங்களின்  காயங்களைக் குணமாக்குவது கடினம் என்றும் கூறினார்.

ஆனால் தாவீது, தீமையான நிலையிலிருந்து ஒரு படி முன்னே நிற்கிறார், கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் நாத்தான், தாவீது செய்த தீமையைப் புரிய வைக்கிறார், தாவீது ஒரு பாவி, ஆனால் அவர் ஒரு புனிதர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தாவீது பாவியாக இருந்தாலும், அவர் பாவத்தில் ஊறிப்போனவர் அல்ல, ஏனெனில், பாவத்தில் ஊறிப்போனவர்கள், தாங்கள் யார் என்பதை உணர்வதில்லை, இத்தகைய மனிதரின் இதயத்தை மாற்றுவதற்கு, சிறப்பு அருள் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை.

அரசர் தாவீது தன்னை, கடவுளிடம் ஒப்படைத்தார், அதனால் அவர் பாவத்திலிருந்து தூய வாழ்வுக்குச் சென்றார், மேன்மையான இதயத்தைக் கொண்டிருந்த தாவீது, நான் பாவம் செய்தேன் என்பதை ஏற்றார், அதனால் நாத்தான் அவரிடம், ஆண்டவர் உன் பாவத்தை மன்னிக்கிறார் என்றும் கூறினார்.

மனத்தாழ்மைக்கு ஒரே வழி, தாழ்மையாக நடத்தப்படல் என்றும், தாவீதின் புனிதம், தாழ்மையாக நடத்தப்பட்டதால் வந்தது என்றும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.