2016-02-01 15:58:00

இது இரக்கத்தின் காலம் – குழந்தையின் பிறப்பால் மாறிய மனம்


“நான் என் வாழ்வில் பெரிய தவறு செய்துவிட்டேன். அதற்காக எனது இதயத்தின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்கிறேன். பெண்கள் பற்றிய பொதுவான கோட்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில், மக்களின் மதங்களைக் கேலி செய்வது அறிவற்ற செயல் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது வாழ்வில் அன்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால் நான் தாயான பிறகு, இந்த அன்பு எனக்குக் கிடைத்துவிட்டது. இந்த அன்பு கிடைத்த பின்னர், இக்காலத்தில் இடம்பெறும் தீவிரப் பெண்ணுரிமை நடவடிக்கை பற்றி அதிகமாகச் சிந்திக்கிறேன். பிரேசில் நாட்டில் கருக்கலைப்பைச் சட்டமாகக் கொண்டுவருவது குறித்த எல்லாத் தீவிர மேடைப் பேச்சுகளும், பேரணிகளும், நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதில் ஆர்வம் காட்டும் தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்களின் வேலை என்பதை நான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. கருக்கலைப்பு என்பது ஒவ்வொரு பெண்ணும் பெற வேண்டிய ஓர் உரிமை என்று எப்போதும் நினைத்திருந்தேன்”... இவ்வாறு அண்மையில் தனது முக நூலில் எழுதியிருப்பவர் Sara Winter. பிரேசில் நாட்டில் கருக்கலைப்பைச் சட்டமாகக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக, தீவிரப் பெண்ணுரிமை ஆர்வலராகப் போராடியவர் இவர். ஆலயங்களுக்கு முன்பாக, அநாகரிக ஆடைகளுடன் போராட்டம் நடத்தும் வன்முறையான Femen முற்போக்குக் குழுவை ஆரம்பித்தவர்களில் Sara Winter அவர்களும் ஒருவர். ஆனால் கடந்த ஆண்டில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் இவரது வாழ்வுக்குப் புதிய அர்த்தம் கிடைத்துள்ளது. Sara Winter அவர்கள், தனது முக நூலில் மேலும் இவ்வாறு பதிவு செய்துள்ளார். முதல் குழந்தையைக் கருக்கலைப்பு செய்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன், அதற்காக மன்னிப்புக் கேட்கிறேன், 2015ம் ஆண்டில் Rio de Janeiro ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற பெண்ணுரிமைப் போராட்டத்தில் நான் புண்படுத்திய எல்லாரிடமும், அவர்கள் அருள்சகோதரிகளோ, பொதுநிலையினரோ எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்.

ஆம். தவறுகளுக்கு மனம்வருந்தி மன்னிப்புக் கேட்பது இரக்கத்தின் கால ஆன்மீகச் செயல்களில் ஒன்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.