2016-01-30 13:48:00

பொதுக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


"நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை" - லூக்கா 4: 24. இன்றைய நற்செய்தியில் இயேசு கூறும் இவ்வார்த்தைகள், இறைவாக்கினர்களைப்பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன. 'இறைவாக்கினர்கள்' என்ற சொல்லைக் கேட்டதும், 'ஓ, அவர்களா?' என்ற எதிரொலி, நம் உள்ளத்தில் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு. 'இறைவாக்கினர்கள்' – ‘அவர்கள்’ அல்ல... நாம்தான்! நாம் ஒவ்வொருவரும், பல நிலைகளில், பலச் சூழல்களில், இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இதை நாம் முதலில் நம்பி, ஏற்றுக்கொள்ள வேண்டும்.

'இறைவாக்கினர்' என்றதும், அது நமது பணியல்ல என்று சொல்லி, தப்பித்துக்கொள்ளும் பழக்கம் நம் அனைவரிடமும் உள்ளது. பொதுநிலையினர், குருக்கள், துறவியர்... ஏன், திருஅவைத் தலைவர்கள் அனைவரிடமும் இப்பழக்கம் உள்ளதென்பதை நாம் மறுக்க முடியாது. இது, இன்று, நேற்று எழுந்த பழக்கம் அல்ல. முதல் (பழைய) ஏற்பாட்டு காலத்திலும் இதை நாம் காண்கிறோம். 'நான் சொல்வதை மக்களிடம் சொல்' என்ற கட்டளை இறைவனிடமிருந்து வந்ததும், பல வழிகளில் தப்பித்து ஓடியவர்களை, நாம் முதல் (பழைய) ஏற்பாட்டில் சந்திக்கிறோம்.

இறைவாக்கினர் எரேமியாவை, தாயின் கருவிலிருந்தே தேர்ந்ததாகக் கூறும் இறைவன், “உன்னை... அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்”  (எரேமியா 1: 17-19) என்று எரேமியாவுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளாக இன்றைய முதல் வாசகத்தில் ஒலிக்கின்றன... ஆனால், இவ்வாக்குறுதிகளை நம்பி பணிசெய்த எரேமியா, இறைவன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இதனால், தான் மக்கள் முன் அவமானமடைய வேண்டியதாகிவிட்டது என்றும் புலம்புவதை நாம் இந்நூலின் பிற்பகுதியில் காண்கிறோம் (எரேமியா 20:7).

இறைவாக்கினராய் மாற ஏன் இந்த பயம், தயக்கம்? இறைவாக்கினர், கூட்டத்தோடு கூட்டமாய்க் கலந்து, மறைந்து போகாமல், தனித்து நிற்க வேண்டியவர்கள் என்பதே, இந்தப் பயத்தின் முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். தனித்து நின்றால், தலைவலிதான், எனவே, கூட்டத்தோடு கரைந்துவிடு என்பதே, இன்றைய உலகம், அதிலும் குறிப்பாக விளம்பர, வர்த்தக உலகம் சொல்லித்தரும் மந்திரம். அதுவும், தற்போதைய கணணித்தொடர்பு வலைகளின் உதவியுடன், அனைவரும் ஒரே வகையில் சிந்திக்கும்படி, நாம் 'மூளைச்சலவை' (brainwash) செய்யப்படுகிறோம். இச்சூழலில், விவிலியத்தின்படி, நன்னெறியின்படி, குறிக்கோளின்படி வாழ்வது எளிதல்ல. அப்படி வாழ்வதால், நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயமே, குறிக்கோள்களைக் கைவிட வைக்கிறது.

உலகமனைத்தும் ஒரே வகையான கருத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்போது, தனித்து நிற்பது, அல்லது, எதிர் நீச்சல் அடிப்பது இளையோருக்குத் தேவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளார். இவ்வுலக உறவுகள், அந்தந்த நேரத்தில் உருவாகி மறைவன என்றும், உண்மைகள், அவரவர் பார்வையில் மாறுவன, எனவே, எதுவுமே நிரந்தரமற்றது என்றும் இவ்வுலகம் தொடர்ந்து அனுப்பி வரும் தவறான கருத்து வெள்ளத்திற்கு எதிராக, தனித்து நிற்கவும், எதிர் நீச்சல் அடிக்கவும் இளையோரை ஊக்கப்படுத்தி வருகிறார், திருத்தந்தை. நம்பிக்கை இழக்கும் வகையில், ஊடகங்கள், நம் மீது திணித்துவரும் செய்திகளை நம்பாமல், இறைவன் மீதும், மனிதர்கள் மீதும் நம்பிக்கையை வளர்ப்பது, இளையோரின் மிக முக்கியக் கடமை என்பதையும், அண்மைய ஓராண்டளவாக திருத்தந்தை வலியுறுத்தி வருகிறார்.

எதிர்த்து நிற்பதும், எதிர் நீச்சல் போடுவதும், இறை வாக்கினர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கியக் கடமை என்பதை, இன்றைய ஞாயிறு வாசகங்கள் கூறுகின்றன. இக்கடமையைச் செய்யும்போது, ஊராரின் பகையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை, இறை வாக்கினர் நன்கு உணர்ந்திருந்தனர். எனவே, 'ஏன் இந்த வம்பு? ஊரோடு ஒத்துப் போய்விடுவோமே' என்ற சோதனை பலவேளைகளில் அவர்களுக்கு எழுந்தது. 'ஊரோடு ஒத்து வாழ'வேண்டும் என்று, குழந்தைப் பருவம் முதல் சொல்லித் தரப்படும் பாடங்கள் ஆழமாக மனதில் வேரூன்றிப் போகின்றன. அதுவும், நாம் ஒத்து வாழவேண்டிய ஊர், நமது சொந்த ஊர் என்றால், இன்னும் முழுமையாக ஒத்துப்போக வேண்டியிருக்கும். இத்தகையச் சூழலைச் சந்திக்கிறார் இயேசு.

தான் பிறந்து வளர்ந்த ஊராகிய நாசரேத்தின் தொழுகைக்கூடத்தில், தன் பணிவாழ்வின் கனவுகளை இயேசு பறைசாற்றினார் என்று சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். அதன் தொடர்ச்சியாக, இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, “இவர் யோசேப்பின் மகன் அல்லவா?” எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர் (லூக்கா 4: 21-22) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது.

ஆரம்பம் ஆழகாகத்தான் இருந்தது. ஆனால், தொடர்ந்து நடந்தது ஆபத்தாக மாறியது. தன் சொந்த ஊரில் இயேசு ஒரு சில உண்மைகளைச் சொல்ல ஆரம்பித்தார். வளர்ந்த ஊர் என்பதால், சிறு வயதிலிருந்து இயேசு அங்கு நிகழ்ந்த பல காரியங்களை ஆழமாக அலசிப் பார்த்தவர். அவர்கள் எல்லாருக்குமே தெரிந்த பல சங்கடமான, உண்மைகளைச் சொன்னார், இயேசு. சங்கடமான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவந்தபோது, அவர்கள் அதுவரை இயேசுவின் மீது வைத்திருந்த ஈர்ப்பு, மரியாதை, மதிப்பு ஆகியவை, கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெற ஆரம்பித்தன.

‘இவர் யோசேப்பின் மகன்’ என்று, இயேசுவின் பூர்வீகத்தை அவர்கள் அலசியபோது, அதை நினைத்து பாராட்டியதாக நற்செய்தி சொல்கிறது. ஆனால், பூர்வீகங்கள் அலசப்படும்போது, பல நேரங்களில் "ஓ, இவன்தானே" என்று ஏகவசனத்தில் ஒலிக்கும் ஏளனம் அங்கு வந்து சேர்ந்துவிடும். (காண்க - மாற்கு 6: 1-6) சாதிய எண்ணங்களில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், தமிழகத்தில் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்காக அல்ல; மாறாக, தேவையற்ற குப்பைகளைக் கிளற என்பது, நமக்குத் தெரிந்த உண்மை.

உண்மை, கசக்கும், எரிக்கும், சுடும். உண்மை, பலவேளைகளில் நம்மைச் சங்கடப்படுத்தும்; நம் தவறுகளைத் தோலுரித்துக் காட்டும். உண்மையின் விளைவுகளை இப்படி நாம் பட்டியலிடும்போது, உண்மையின் மற்றொரு பக்கத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். உண்மை, விடுவிக்கும். உண்மை, மீட்பைத் தரும்.

உண்மை விளைவிக்கும் சங்கடங்களைச் சமாளிக்கமுடியாமல், பல நேரங்களில் உண்மையை மறைத்துவிட, அழித்துவிட முயற்சிகள் நடக்கின்றன. உண்மை பேசும் இறைவாக்கினர்களின் செயல்பாடுகளைப் பலவழிகளில் நிறுத்த முயன்று, எல்லாம் தோல்விகண்ட பின், இறுதியில் அந்த இறைவாக்கினரின் வாழ்வையே நிறுத்த வேண்டியதாகிறது. உண்மையைச் சொல்பவருக்கும், உயிர்பலிக்கும் அப்படி ஒரு நெருங்கிய உறவு உண்டு.

இன்று நற்செய்தியில் இயேசுவுக்கும் அந்த நிலைதான். இயேசு சொன்ன உண்மைகளைக் கேட்கமுடியாமல், அவ்வூர் மக்களுக்கு, முக்கியமாக, தொழுகைக் கூடத்தை நடத்திவந்த மதத் தலைவர்களுக்கு ஏற்பட்ட கோபம், கொலை வெறியாகிறது. எனவே அவர்கள் “அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்” (லூக் 4: 29) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

இயேசுவை 'மலையுச்சிக்கு' இழுத்துச் சென்றனர் என்ற கருத்தை, விவிலிய ஆய்வாளரான, அருள்பணி இயேசு கருணா அவர்கள், பல்வேறு கோணங்களில் சிந்தித்துள்ளார். இதோ, அவர் வழங்கும் எண்ணங்கள்:

நாசரேத்து மக்கள் இயேசுவை மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு, இயேசுவின் சோதனையை நினைவுபடுத்துகிறது. இயேசுவை சோதித்த சாத்தானும்  அவரை மலை உச்சிக்குத்தான் அழைத்துச் செல்கிறான். இதை, லூக்கா நற்செய்தி 4ம் பிரிவின் துவக்கத்தில் (லூக் 4:1-13, மத் 4:1-11) நாம் காண்கிறோம். அதைத் தொடர்ந்து, இயேசு நாசரேத்து வந்தபிறகு, மீண்டும் அவரை மக்கள் மலையுச்சிக்கு இழுத்துச் சென்றனர். இது, இயேசுவின் பணிவாழ்வில் வந்த இரண்டாவது சோதனை என்று சிந்திக்கலாம்.

தன்னோடு சமரசம் செய்துகொண்டால், இவ்வுலகம் முழுவதுமே இயேசுவின் காலடியில் கிடக்கும் என்ற முதல் சோதனையை, சாத்தான் மலையுச்சியில் கொடுத்தான். அத்தகைய சமரசம் வேண்டாம் என்று விலகி வந்து, இயேசு தன் பணியைத் துவக்கியபோது, தன் சொந்த மக்களிடமிருந்தே அவருக்கு எதிர்ப்பு எழுகிறது. இம்மக்களை வெல்வது கடினம் என்று எண்ணி, இயேசு மறைந்துவிட நினைப்பதையே நாசரேத்து மலையுச்சியில் நிகழ்ந்த இரண்டாவது சோதனை நமக்கு உணர்த்துகிறது.

இயேசுவுக்கு வந்த இந்த இரண்டாம் சோதனையை, 'Martyr Complex', அதாவது, ‘உயிரை மாய்த்துக்கொள்ளும்’ சோதனையாக எண்ணிப்பார்க்கலாம். இந்தச் சோதனை, முதல் (பழைய) ஏற்பாட்டில் எலியா மற்றும் எரேமியா இறைவாக்கினர்களுக்கும் வருகின்றது. தங்களையும், தங்கள் பணியையும் மக்கள் ஏற்றுக்கொள்ளாதபோது, தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணுகின்றனர். உயிரை மாய்த்துக்கொள்ளுதல் இதற்கு தீர்வாகுமா? 'நீ மறைசாட்சியானால், எல்லாரும் உன்னை மதிப்பர்' என, சாத்தான், நம் உள்ளத்தையும் சோதித்துப் பார்க்கின்றான். வாழ்வில் வரும் எதிர்ப்புகளைக் கண்டு பயந்து ஓடிவிடச் சொல்கின்றான். அல்லது, எதிர்ப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் எளிதான வழி, தற்கொலை என்றும் சொல்லித் தருகிறான்.

மலையுச்சிக்கு இழுத்துச் செல்லப்பட்ட இயேசு, 'அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து போய்விட்டார்' (லூக்கா 4: 30) என்று, இன்றைய நற்செய்தி முடிவடைகிறது. அவர் நம்மைப்போல் ஒரு சராசரி மனிதராய் இருந்திருந்தால், "இந்த அனுபவம் எனக்குப் போதும். நான் ஏன் இந்த ஊருக்கு உண்மைகளைச் சொல்லி, ஏச்சும், பேச்சும் பெற வேண்டும்? தேவையில்லை இவர்கள் உறவு" என்று இயேசு ஒதுங்கியிருப்பார். ஆனால், அன்று தன் சொந்த ஊரான நாசரேத்தில் உண்மையைப் பறைசாற்றத் துவங்கிய இயேசுவின் நற்செய்திப்பணி, கல்வாரி மலையுச்சி வரை தொடர்ந்தது. இயேசு செய்ததைப் போல, நம்பிக்கையுடன் நற்செய்திப்பணியைத் தொடர்ந்து செய்வதற்கு நமக்கு துணிச்சல் இருக்கிறதா?

மேலும், மலை உச்சிக்கு ஏற்றி, இயேசுவை தங்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட நினைக்கிறார்கள் மக்கள். இன்று, நம் வாழ்வும், வழிபாடுகளும்கூட இயேசுவை பல நேரங்களில் நம்மிடமிருந்து அந்நியப்படுத்திவிடுகின்றன. மலையுச்சியை மற்றொரு கோணத்தில் பார்த்தால், இன்று, கடவுளுக்குப் பதிலாக நாம் மற்ற பொருள்களை உச்சத்தில் ஏற்றி, வழிபட்டு வருகிறோம். அல்லது, எங்கள் கடவுள்தான் மேன்மையானவர் என, மற்ற கடவுளர்களை உச்சியிலிருந்து தள்ளி, கொல்லப் பார்க்கின்றோம்.

கடவுளை நாம் நம் வாழ்விலிருந்து ஒழித்துவிட நினைத்து, அவரை உச்சிக்கு அழைத்துச் சென்றாலோ, அல்லது 'ஊரோடு ஒத்து வாழ்தல்' என்ற பெயரில், படைக்கப்பட்டப் பொருட்களை உச்சியில் வைத்து, கொண்டாட நினைத்தாலோ, அவர் தொடர்ந்து, 'நம் நடுவே நடந்தவண்ணம் இருப்பார்'. ஏனெனில், அவர் கடவுள். உச்சிகளை விரும்பாத அந்த இறைவனை, நம் நடுவே நடந்துவரும் அன்பு இறைவனை அடையாளம் கண்டுகொள்ள, இறைவன் நமக்கு அருளொளி தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.