2016-01-30 13:39:00

இது இரக்கத்தின் காலம் – இறந்தபின்னும் வாழும் இலட்சியங்கள்


உயிரோடு இருக்கும்போது உண்மைகளைச் சொல்ல வாய்ப்பில்லாத ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்கள், எழுத்துவடிவில் விட்டுச்சென்ற உண்மைகள், அவர்கள் இறந்த பின்னரும் வாழ்வதைக் காண்கிறோம். சனவரி 27, கடந்த புதனன்று, அகில உலக தகன நினைவு நாளைக் கடைபிடித்தோம். நாத்சி படையினரால் தகனமாக்கப்பட்டு, உயிரிழந்த Anne Frank என்ற 13 வயது சிறுமி, நாத்சி படையினர் பிடியில் சிக்குவதற்கு முன் ஈராண்டுகள் மறைந்து வாழ்ந்தார். அந்த ஈராண்டுகள், அவர் தன் நாள் குறிப்பேட்டில் எழுதியிருந்த எண்ணங்கள், அவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டன. நாள் குறிப்பேட்டின் ஒரு பக்கத்தில் அவர் எழுதியிருந்த எண்ணங்கள், இதோ:

"குறிக்கோள்கள், கனவுகள் நமக்குள் பிறக்கின்றன. ஆனால், நாம் வாழும் சூழல், இவற்றை சுக்குநூறாகச் சிதறடிக்கிறது. இந்த அவல நிலையிலும் நான் என் குறிக்கோள்களை இழக்கவில்லை. இவையனைத்தும், நிறைவேற்ற முடியாத கனவுகளாகத் தெரிந்தாலும், நான் இவற்றை இதுவரை என் உள்ளத்தில் சுமந்து வந்திருப்பது, எனக்கே வியப்பாக இருக்கிறது. இவ்வுலகம் அவநம்பிக்கையில் மூழ்கினாலும், நான் என் குறிக்கோள்களை இழக்கப்போவதில்லை. ஒருநாள் வரும். அன்று என் குறிக்கோள்கள்களை வாழ்ந்து காட்டுவேன்."

குறிக்கோள்களை இழக்காமல் வாழ்ந்த இளையவர் Anne Frank போல், இன்றும் நம்மிடையே வாழும் வீர உள்ளங்களை, இறைவன், இரக்கத்தின் காலத்தில், தொடர்ந்து காக்கவேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.