2016-01-29 15:32:00

விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்திற்கு திருத்தந்தை நன்றி


சன.29,2016. சில அருள்பணியாளர்களின் சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரத்தைப் பொறுப்பேற்று நடத்திவரும் விசுவாசக் கோட்பாட்டு பேராயத்திற்கு, தனது நன்றியைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள், அப்பேராயத் தலைவர் கர்தினால் Gerhard Ludwig Mueller அவர்கள் தலைமையில், இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, இறையியல் மற்றும் மறைக்கல்விப் பணிகளில், திருஅவைக் கோட்பாடுகளைத் தீர்மானிப்பது, மருத்துவம், உயிரியல் நன்னெறி போன்ற விவகாரங்களில் ஆலோசனை வழங்குவது, அருள்பணியாளர்களின் சிறார் பாலியல் முறைகேடுகள் குறித்த விவகாரங்களில் விசாரணைகள் நடத்துவது போன்றவற்றிற்கு, இப்பேராயம் ஆற்றிவரும் செயல்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இரக்கத்தின் உடல்சார்ந்த பணிகள், ஆன்மீகப் பணிகள் ஆகிய இவையிரண்டுக்கும் உள்ள  தொடர்பு, திருஅவை வாழ்விலும், நிர்வாகத்திலும் ஒன்றிப்பின் முக்கியத்துவம், திருஅவையின் வாழ்விலும், பணியிலும் அருங்கொடைகள் போன்றவை பற்றியும் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பசித்தவருக்கு உணவு வழங்கினோமா, தாகமாய் இருந்தவர்க்குத் தண்ணீர் கொடுத்தோமா என்று நம் வாழ்வின் இறுதியில் கேட்கப்படும், இதற்குச் சமமாக, சந்தேகத்தில் வாழ்பவர் அதிலிருந்து வெளிவர உதவினோமா, பாவிகளை வரவேற்பதற்கு நம்மை அர்ப்பணித்திருந்தோமா போன்ற கேள்விகளும் கேட்கப்படும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.