2016-01-29 15:46:00

நோயாளிகளைப் பராமரிப்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது


சன.29,2016. உடல்நலம் குன்றியுள்ள நம் உறவுகள் நோய் நீங்கி நலமுடன் வாழ,  அவர்களுக்காகச் செபிப்பது, அவர்களை அன்புடன் பராமரிப்பது, மனிதர் ஏன் துன்புறுகின்றனர் என்று கேள்வி எழுப்புவது ஆகியவை, எல்லா மதத்தினரும்  செய்பவை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வருகிற பிப்ரவரி 11ம் தேதி சிறப்பிக்கப்படும் உலக நோயாளர் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில், நோயாளிகளுக்காகச் செபிக்கும் இந்த உலக நாளும், இரக்கத்தின் யூபிலி ஆண்டு முழுவதும், பல்வேறு மதத்தினர் மத்தியில் சந்திப்பை ஊக்குவிக்கவும், புரிந்துகொள்தலை அதிகரிக்கவும் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மருத்துவமனையும், நோயாளர் பராமரிப்பு இல்லமும், சந்திப்பு மற்றும் அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் காணக்கூடிய அடையாளங்களாக மாறுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இதன் வழியாக, அந்த இடங்களில் பாகுபாடுகள் களையப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த உலக நோயாளர் நாள், புனித பூமியின் நாசரேத் நகரில் பெரிய அளவில்      கொண்டாடப்படவிருப்பதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இந்நகரில் இந்நிகழ்வு இடம்பெறுவது, நம் எல்லாருக்கும் எவ்வளவு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மரியாவின் அக்கறை உணர்வில், இறைவனின் கனிவு பிரதிபலிக்கின்றது, இதே கனிவு,  நோயாளிகளைப் பராமரிப்பவர் அனைவரிலும் வெளிப்பட வேண்டுமென்றும், நோயாளிகளைப் பராமரிக்கும் பணியை ஆற்றும் கத்தோலிக்கருக்கு இறைவன் பலன் அளிப்பார் என்றும் தனது செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்கள் அவைத் தலைவர் பேராயர் சிக்மண்ட் சிமோஸ்கி அவர்கள் தலைமையிலான குழு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை, இவ்வியாழனன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.