2016-01-29 16:15:00

தொழுநோயாளர் மாண்புடன் வாழ்வதற்கு உதவுமாறு வேண்டுகோள்


சன.29,2016. தொழுநோயைக் குணப்படுத்த முடியும் மற்றும் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொது வாழ்வுக்குத் திரும்ப முடியும் என்ற நிலை உள்ளதால், தொழுநோயின் அடையாளங்களைக் கொண்டிருப்பவர்கள், சமூக வாழ்விலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவது, முற்றிலும் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சனவரி 31, வருகிற ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் 63வது உலக தொழுநோயாளர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்கள் அவைத் தலைவர் பேராயர் சிக்மண்ட் சிமோஸ்கி அவர்கள் தொழுநோயாளர் மாண்புடன் வாழ்வதற்கு, நலமாக இருப்பவர்கள் உதவுமாறு கேட்டுள்ளார்.

“வாழ்வது, வாழ்வதற்கு உதவுவதற்கே” என்ற தலைப்பில், இவ்வுலக நாள் கடைப்பிடிக்கப்படுவதைக் குறிப்பிட்டுள்ள பேராயர் சிமோஸ்கி அவர்கள், இந்நோய்க்கு எதிராக உழைப்பதற்கு, இந்நாள் ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கின்றது என்று கூறினார்.

தொழுநோயாளர்க்காகப் பணியாற்றும் Sasakawa நிறுவனம் மற்றும் Raoul Follereau அமைப்புடன் சேர்ந்து, திருப்பீட நலவாழ்வுப் பணியாளர்கள் அவை, வருகிற ஜூன் 10,11 தேதிகளில் வத்திக்கானில் இருநாள்கள் கருத்தரங்கை நடத்தும் என்றும் பேராயர் சிமோஸ்கி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் சனவரி இறுதி ஞாயிறன்று, உலக தொழுநோயாளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.