2016-01-29 15:56:00

திருத்தந்தை Auschwitz வதைமுகாமைப் பார்வையிடக் கூடும்


சன.29,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஜூலையில் போலந்து நாட்டுக்குத் திருத்தூதப் பயணம் மேற்கொள்ளும்போது, முன்னாள் Auschwitz  வதைமுகாமைப் பார்வையிடக் கூடும் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.

கிராக்கோவ் நகருக்குச் சென்றுள்ள திருத்தந்தையர் அனைவரும், இரண்டாம் உலகப் போரின்போது மரண முகாமாகப் பயன்படுத்தப்பட்ட Auschwitz வதைமுகாமுக்குச் சென்றுள்ளனர் என்று, யூத இன ஒழிப்பு நினைவு நாளான சனவரி 27ம் தேதியன்று கூறினார் அருள்பணி லொம்பார்தி.

நாங்கள் யூதர்களாக இருந்தோம், அதுவே எங்களின் ஒரே குற்றம் என்று பொருள்படும் இத்தாலிய மொழியிலான நூல் ஒன்று, சனவரி 27, கடந்த புதனன்று வெளியிடப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் Auschwitz  வதைமுகாமைப் பார்வையிட்டுள்ளனர் என்று கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எருசலேமிலுள்ள Yad Vashem யூத இன ஒழிப்பு நினைவு மண்டபத்தைப் பார்வையிட்டுள்ளார் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.

உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்கு, வருகிற ஜூலையில் திருத்தந்தை செல்லவிருக்கும் கிராக்கோவ் நகருக்கு ஏறக்குறைய எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் முன்னாள் Auschwitz வதைமுகாம் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது ஏறக்குறைய அறுபது இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.