2016-01-28 15:37:00

திருத்தந்தை : பெற்ற ஒளியை பிறருடன் பகிருங்கள்


சன.,28,2016. மிகப் பெரிய இதயம் கொண்ட இறைத்தந்தையின் குழந்தைகளான கிறிஸ்தவர்கள், விரிந்த கரங்களுடன் அனைவரையும் வரவேற்கும் உள்ளம் கொண்டவர்களாக உள்ளனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இவ்வியாழனன்று காலை நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெரிய இதயம் கொண்ட கிறிஸ்தவர்கள், இறை ஒளியின் சாட்சிகளாக விளங்க கடமைப்பட்டுள்ளனர் எனவும் எடுத்துரைத்தார்.

எவரும் விளக்கை கட்டிலின் கீழ் ஒளித்து வைப்பதில்லை, மாறாக, அனைவருக்கும் தெரியும்படி, குன்றின் மேல் வைப்பர் என்ற, இந்நாளைய திருப்பலி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள், திருமுழுக்கில் பெற்ற ஒளியை பிறருக்கு வழங்குவதன் வழியாக, சாட்சிகளாக விளங்குகிறார்கள் என்றார்.  

நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவில் கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், தங்கள் சுயநலங்களுக்கு அடிமையாகாமல், பிறருக்கு திறந்தமனதுடன் செயல்படுகின்றனர் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியானவரின் வழிநடத்தலுக்கு நம்மை உட்படுத்தும்போது, நம் இதயம் பெருந்தன்மையுடையதாக மாறுகின்றது என்று கூறினார்.

புனித தாமஸ் அக்குவினாசின் திருவிழாவை திருஅவை சிறப்பித்த இந்நாளில், குருத்துவப் பணியில் 50 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ள சில அருள்பணியாளர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 50 ஆண்டுகளில் இந்த அருள்பணியாளர்கள், இறைவனின் ஒளியை எடுத்துச்சென்று மக்களின் மனங்களில் ஒளியேற்றியுள்ளது குறித்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.