2016-01-28 15:55:00

உயிரியல் நன்னெறி தேசிய அவை உறுப்பினர்களுடன் திருத்தந்தை


சன.28,2016. உயிரியல் நன்னெறி என்ற களத்தில், அறிவுசார்ந்த வகையில் தனியொரு இடத்தை கத்தோலிக்கத் திருஅவை வகிக்கவில்லை எனினும், இத்துறையில் திறந்த மனதுடன் நடைபெறும் உரையாடல்களில் பங்கேற்று வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

இத்தாலிய அரசின் ஆதரவுடன் கடந்த 25 ஆண்டுகளாகச் செயலாற்றிவரும் உயிரியல் நன்னெறி தேசிய அவையின் உறுப்பினர்களை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, பொறுப்புணர்வுடன் பணியாற்றிவரும் இந்த அவையின் பணிகளைப் பாராட்டினார்.

விவிலிய படிப்பினைகளை அடித்தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் உயிரியல் நன்னெறி அவையின் தேடல்களில் திருஅவையும் ஆர்வமாகப் பங்கேற்கும் என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

மனித உயிருக்கும், படைப்பு அனைத்திற்கும் தகுந்த மதிப்பு வழங்கும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் நன்னெறி விவாதங்களில், சமுதாயத்தின் விளிம்புகளுக்குத் தள்ளப்படுவோரின் குரல்களும் ஒலிக்க வேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

கருவிலிருந்து கல்லறை வரை மாண்புடன் வாழவேண்டிய மனிதர்கள், எக்காரணம் கொண்டும் ஒரு பயன்பாட்டுப் பொருளாக மாறக்கூடாது என்பதை உயிரியல் நன்னெறி அவை உலகிற்குப் பறைசாற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

மனித மையம் என்ற நிலையைத் தாண்டி, தற்போது, உயிர் வாழும் அனைத்து படைப்பின் மையம் என்ற நிலைக்கு நன்னெறி குறித்த கலந்துரையாடல்கள் அமைய வேண்டும் என்று, திருத்தந்தை தன் உரையில் விண்ணப்பித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.