2016-01-28 14:56:00

இது இரக்கத்தின் காலம் – நிரந்தரமானதை நாடுவோம்


சூஃபி ஞானி ஒருவர், அந்த நகருக்கு வெளியே ஒரு மரத்தடியில் குடிசையமைத்து வாழ்ந்து வந்தார். அந்த நகருக்குள் யாரையாவது தேடி வருகிறவர்கள், அந்த ஞானியிடம் சென்று, யார் பெயரையாவது சொல்லி, அந்த நபர் வீடு எது, அவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்று கேட்டால், வலது பக்கமாகக் கையை நீட்டி, அதோ அங்கேதான் அவரது வீடு இருக்கிறது என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுவாராம். மக்களும், அந்த ஞானியின் சொல்லை நம்பி, அவர் சொன்ன வழியில் செல்வார்களாம், ஆனால் அவர்கள், தாங்கள் கேட்ட நபரின் வீட்டை அல்ல, இடுகாட்டைத்தான் பார்த்தார்களாம். இதனால் எரிச்சலுடன் திரும்பி வந்த மக்கள், என்ன மனிதர் ஐயா நீங்கள், ஆளின் வீட்டு முகவரி கேட்டால், இடுகாட்டுக்கு வழி சொல்கிறீர்கள் என்று கோபப்படுவார்களாம். ஞானியோ, அதுதானப்பா நீங்கள் கேட்ட அந்த நபரின் நிரந்தர முகவரி. என்றாவது ஒருநாள் அங்கேதானே அவர் வந்து சேர வேண்டும். எப்படியும் அவரை அங்கே நீங்கள் கண்டுபிடித்துவிட முடியும். அதுதான் மாற்ற முடியாத வீடு, அதுதான் நிலையான முகவரி, நகரத்தில் அவரது முகவரி தற்காலிகமானது, மாற்றத்திற்கு உட்பட்டது, இடுகாட்டு முகவரிதான் மாறாதது என்று, அம்மக்களிடம் கேலியாகச் சொல்வாராம். ஆம். மனிதர் வாழ்வில், உயிர் நிரந்தரம் இல்லை, உடைமை நிரந்தரம் இல்லை, உறவும் நிரந்தரம் இல்லை. எல்லாம் கடந்து போகும். ஆதலால் நிரந்தரமானதை நோக்கி வாழ அழைக்கிறது இரக்கத்தின் காலம். இது ஆன்மீகப் புதுப்பித்தலின் காலம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.