2016-01-28 16:02:00

அமெரிக்க ஐக்கிய நாட்டில், தேசிய திருமண வாரம்


சன.28,2016. கிறிஸ்தவ அருள் அடையாளமான திருமணம், மனித சமுதாயத்திற்கும், மக்கள் அனைவருக்கும் வேறு எவ்வகையிலும் ஈடுசெய்ய முடியாத ஒரு கொடை என்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆயர் பேரவை கூறியுள்ளது.

பிப்ரவரி 7ம் தேதி முதல், 14ம் தேதி முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களிலும் கொண்டாடப்படவிருக்கும் தேசிய திருமண வாரத்தையொட்டி, அமெரிக்க ஆயர் பேரவையின், பொதுநிலையினர், குடும்பம், மற்றும் இளையோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர், ரிச்சர்ட் மலோன் (Richard Malone) அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.

குடும்பங்களை மையப்படுத்தி பிலடெல்பியாவில் நடைபெற்ற உலக மாநாட்டிற்கு திருத்தந்தை வருகை தந்தது, தலத்திருஅவைக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது என்று குறிப்பிட்ட ஆயர் மலோன் அவர்கள், அதேநேரம், கடந்த ஆண்டு, ஒரே பாலின திருமணத்தை உச்ச நீதி மன்றம் அங்கீகரித்தது, அமெரிக்க சமுதாயத்திற்கு பெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஏழாவது ஆண்டாக, அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெறவிருக்கும் இந்த ஒரு வார நிகழ்வின் இறுதியில், பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் நாள், உலகத் திருமண நாளென்று சிறப்பிக்கப்பட வேண்டுமென்று ஆயர் மலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க சமுதாயத்தில் குடும்பங்களில் நிலவும் பிரச்சனைகளை மையப்படுத்தி, பிப்ரவரி 12ம் தேதி ஒரு செப நாளாகவும், ஒரு தியாக நாளாகவும் கடைபிடிக்கப்படும் என்று ஆயர் மலோன் அவர்கள் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : USCCB / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.