2016-01-27 16:19:00

மலையக மக்களை இலக்கு வைக்கும் 'சிறுநீரக வர்த்தகக் கும்பல்கள்'


சன.27,2016. இலங்கையின் மலையகப் பகுதிகளில் வறுமைப் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகப் பகுதி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிறுநீரக வர்த்தகத்தில் 'தரகர்கள்' ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நேர்ந்துள்ள நிலைமை பற்றி வெளியில் கூற அச்சப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

'ஹட்டனில் உள்ள தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பத்து இலட்சம் ரூபாய் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தைப் பெற்றுவிட்டு' சிலர் அவருக்குப் பணம் கொடுக்காமல் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாகவும் தகவல் உள்ளதாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறினார்.

வறுமை காரணமாக அல்லது விழிப்புணர்வு குறைவாக உள்ளமை காரணமாக மலையக மக்களை, குற்றக் கும்பல்கள் இலக்கு வைப்பதாக தான் கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களே இலங்கையில் பணம் கொடுத்து சிறுநீரகத்தை வாங்குவதாக தகவல்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மலையக மக்கள் மத்தியில் இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இலங்கையின் சில மருத்துவமனைகளில் சிறுநீரகங்களை விற்கும் சட்டவிரோதமான வியாபாரம் நடப்பதாகக் கூறி வெளியான புகார்களைத் தொடர்ந்து, வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகளைச் செய்வதை இடைநிறுத்துமாறு அரசு அண்மையில் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, சிறுநீரக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ள மலையகப் பெருந்தோட்ட மக்கள் யாராவது இருப்பார்களாயின் அவர்கள் தங்களின் அத்தாட்சி பூர்வமான அனைத்து விபரங்களையும் தனக்கு தெரிவிக்குமாறு சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.