2016-01-27 15:24:00

"திருநற்கருணையும்,படைப்பின் பாதுகாவலும்"-கர்தினால் டர்க்சன்


சன.27,2016. கத்தோலிக்க வாழ்வு என்ற மகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு வைரமாக விளங்குவது திருநற்கருணை என்றும், பல திசைகளிலிருந்து இந்த வைரத்தின் மீது விழும் ஒளி, பல வண்ணங்களை வெளிப்படுத்தும் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் நடைபெற்றுவரும் 51வது அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு, நீதி, அமைதி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் அனுப்பியுள்ள ஒரு மறைகல்வி உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.

கிறிஸ்தவ வாழ்வின் சிகரமாகவும், ஊற்றாகவும் திருநற்கருணை விளங்குகிறது என்று 2ம் வத்திக்கான் சங்கம் கூறியதை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள கர்தினால் டர்க்சன் அவர்கள், விண்ணகத்தை இந்த பூமிக்குக் கொணரும் வலிமை பெற்றது திருநற்கருணை என்று எடுத்துரைத்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலின் கருத்துக்கள், விண்ணையும் மண்ணையும் இணைக்கும் திருநற்கருணையுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளது என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவின் வடிவில் நம்மிடையே வாழும் இயேசு, உலகை வாட்டும் உணவுப் பற்றாக்குறை, தகுந்த ஊதியமற்ற உழைப்பு ஆகிய கருத்துக்களையும் நமக்கு நினைவுறுத்துகிறார் என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஞாயிறு திருப்பலிகளைப் பற்றி எடுத்துரைக்கும் கர்தினால் டர்க்சன் அவர்கள், ஒய்வு நாளின் பொருள் குறித்தும், நுகர்வுக் கலாச்சாரத்தால் இறைவனை விட்டு விலகிச் செல்லும் ஒய்வு நாள் வடிகால்கள் குறித்தும் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இறைத் தன்மையையும், இவ்வுலகையும் இணைக்கும் ஓர் அருள் அடையாளமாக விளங்கும் திருநற்கருணையை, தகுந்த முறையில் புரிந்துகொள்ளவும், கொண்டாடவும் நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையை நிறைவு செய்துள்ளார்.

"திருநற்கருணையும், படைப்பின் பாதுகாவலும்" என்ற தலைப்பில், கர்தினால் டர்க்சன் அவர்கள் வழங்கிய இந்த மறை கல்வி உரையை, Cagayan de Oroவின் பேராயரான Antonio Ledesma அவர்கள், இப்புதனன்று மாநாட்டில் வாசித்தார்.

சனவரி 24, கடந்த ஞாயிறன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் துவங்கிய 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, வருகிற ஞாயிறன்று நிறைவு பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.