2016-01-27 16:09:00

உலக நாடுகளின் ஊழல் போக்கு:76-வது இடத்தில் இந்தியா


சன.27,2016. 2015ம் ஆண்டில் உலக நாடுகளிடையே நிலவிய ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 76-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டென்மார்க், ஊழலற்ற நாடாக முதலிடத்தில் இருக்கிறது. சொமாலியாவும், வட கொரியாவும் ஊழல் மலிந்த நாடுகளாக, கடைசி இடத்தில் இருக்கின்றன.

2015 ஆண்டின் உலகளாவிய ஊழல் போக்குக் குறியீட்டின் (Global Corruption Perception Index) தரவரிசைப் பட்டியலை, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) அமைப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 168 நாடுகள் கொண்ட இந்தத் தரநிலைப் பட்டியலில், இந்தியா 9 இடங்கள் ஏற்றம் கண்டு 76-வது இடத்தை அடைந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில், நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும் இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா, கடந்த 2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்தது.

மொத்தம் 168 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா பெற்றுள்ள மதிப்பு 100-க்கு 38, பிடித்துள்ள இடம் 76. தாய்லாந்து, புர்கினா ஃபாசோ, பிரேசில், டுனீசியா, ஜாம்பியா ஆகிய நாடுகளும் இதே இடத்தில் இருக்கின்றன.

 “2015-ம் ஆண்டை பொருத்தவரை உலகளவில் ஊழலை எதிர்த்து மக்களின் குரல் ஓங்கி ஒலித்த மற்றோர் ஆண்டு என்றே சொல்ல வேண்டும். மக்களின் எதிர்ப்புக் குரல் ஆட்சியாளர்களுக்கு வலுவான செய்தியைத் தாங்கிச் சென்றுள்ளது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகள் பாய வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் ஹொஸெ உகாஸ் (José Ugaz) அவர்கள் கூறியுள்ளார். ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 168 நாடுகளில் 3-ல் 2 நாடுகள் 50 புள்ளிகளுக்கும் கீழாகப் பெற்றுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2015-ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேறியுள்ளன, 53 நாடுகள் பின்தங்கியுள்ளன. இதர நாடுகளின் நிலையில் எவ்வித ஏற்ற, இறக்கமும் இல்லை என்று, ஹொஸெ உகாஸ் (José Ugaz) அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.