2016-01-26 15:47:00

தனக்காகச் செபிக்குமாறு திருத்தந்தையிடம் ஈரான் அரசுத்தலைவர்


சன.26,2016. ஈரான் அரசுத்தலைவர் Hassan Rouhani  அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து, தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நாற்பது நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயுள்ள உறவுகள் துறையின் செயலர் பேராயர் Paul Gallagher ஆகிய இருவரையும் சந்தித்தார் ஈரான் அரசுத்தலைவர் Rouhani.

மத்திய கிழக்குப் பகுதியை அச்சுறுத்தும் அரசியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும்,  பயங்கரவாதமும், ஆயுத வர்த்தகமும் பரவாமல் தடைசெய்யவும், அமைதியை ஊக்குவிக்கவும், பிற மத்திய கிழக்கு நாடுகளுடன் ஈரானும் சேர்ந்து செயல்படுமாறு இச்சந்திப்புகளில் ஈரான் அரசுத்தலைவர் Rouhani அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், திருப்பீடத்திற்கும், ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், ஒவ்வொரு மனிதரின் மாண்பையும், சமய சுதந்திரத்தையும் ஊக்குவிப்பதற்கு ஈரான் கத்தோலிக்கத் திருஅவையும் திருப்பீடமும் ஆதரவாக இருப்பது போன்ற கருத்துக்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன.

1999ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், அப்போதைய ஈரான் அரசுத்தலைவர் Mohammad Khatami அவர்களைச் சந்தித்த பின்னர், அந்நாட்டு அரசுத்தலைவர் ஒருவர், இச்செவ்வாயன்று திருப்பீடம் வந்து திருத்தந்தையைச் சந்தித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.