2016-01-26 16:08:00

கந்தமால் கிறிஸ்தவர்கள் பற்றிய நூல் தமிழில்


சன.26,2016. ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில், கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்திய சாட்சிய வாழ்வை விளக்கும் நூல் ஒன்றின் தமிழ் மொழி பிரதி வெளியிடப்பட்டுள்ளது.

“21ம் நூற்றாண்டின் தொடக்க காலக் கிறிஸ்தவர்கள் : கந்தமால் வனங்களிலிருந்து வியத்தகு கிறிஸ்தவ சாட்சியக் கதைகள்” என்று பொருள்படும், Early Christians of 21st Century -  stories of incredible Christian witness from Kandhamal jungles என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் வெளிவந்த நூலின் தமிழ் மொழி பிரதி வெளியிடப்பட்டது.

சனவரி 21, வியாழன் முதல், சனவரி 23, சனிக்கிழமை வரை  மதுரையில் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவைக் கூட்டத்தில், நூலின் முதல் பிரதியை, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்களிடம் கொடுத்தார்.

இந்நூலை வெளியிட்டுப் பேசிய ஆயர் ரெமிஜியுஸ் அவர்கள், இந்நூலை உருவாக்கிய பத்திரிகையாளர் Anto Akkara அவர்கள், கந்தமால் கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட துன்பங்களையும், அவர்களின் சாட்சியங்களையும் மிகத் துல்லியமாக வெளிக்கொண்ர்ந்துள்ளார் என்று பாராட்டினார்.

மேலும், சென்னை-மயிலைப் பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். இந்நூல், தமிழ் தவிர, மலையாளம், இந்தி, Mizo, ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் நடைபெற்ற தமிழக ஆயர் பேரவைக் கூட்டத்தில், தமிழக ஆயர் பேரவையின் புதிய தலைவராக, மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.