2016-01-26 15:41:00

இறை இரக்கத்தை அனுபவிக்க, நல்லதொரு வாய்ப்பாக தவக்காலம்


சன.26,2016. சிறப்பு யூபிலி ஆண்டில் இடம்பெறும் இந்த தவக்காலத்தை, இறை இரக்கத்தை அனுபவிக்கும், மற்றும், கொண்டாடும் நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோம் என தன் தவக்காலச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்ற வார்த்தைகளுடன் இவ்வாண்டிற்கான தவக்காலச் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறை இரக்கத்தை அனுபவிக்கவும், பிறருக்கு வழங்கவும், நாமனைவரும் அன்னைமரியைப்போல், இறைவார்த்தைக்கு, செப உணர்வில் செவிமடுக்க முதலிடம் கொடுப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.

இறைவன் மனிதனுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம், இரக்கத்தின் ஒரு வரலாறு என்பதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளத் திருத்தந்தை, இந்த உடன்படிக்கையில், இறை இரக்கத்தின் மறையுண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதையும், இறை இரக்கத்தின் வளமையையும் காணமுடியும் என குறிப்பிட்டுள்ளார். 

இறை இரக்கத்தின் வழியாக இதயங்களில் மாற்றத்தை அனுபவிக்கும் நாம், அதனை மற்றவர்களுக்கும் திருப்பி வழங்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றையை நவீன உலகில் மனிதர்கள், இரக்கம் குறித்த அக்கறையின்றி வாழும் நிலையில், இலாசரின் உருவில் நம் கதவருகே காத்து நிற்கும் இயேசுவைக் குறித்துச் சிந்திக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார்.

தன்னால் எதுவும் முடியும், தானே அனைத்து வல்லமையும் உடையவர் என மனிதர் நினைப்பதே, ஆதிகாலத்திலிருந்தே பாவத்தின் வேராக இருந்துள்ளது என்பதையும் தன் தவக்காலச் செய்தியில் எடுத்தியம்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் வார்த்தைக்கு செவிமடுப்பதற்கும், இரக்கச் செயல்களை ஆற்றுவதற்கும் இந்த தவக்காலம் சிறந்ததொரு வாய்ப்பு என்பதால், அனைத்திற்கும் ஒரே பதிலாக நிற்கும் அன்பு எனும் சக்தியைக் கொண்டு, இத்தவக்காலத்தில் இறைவனையும் ஏழைகளையும் நோக்கி மனம் திரும்புவோம் என தன் செய்தியில் மேலும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.