2016-01-26 14:46:00

இது இரக்கத்தின் காலம் : மன்னிப்பு, மலைகளைத் தாண்டும்


ஜோர்டின் (Jordyn Howe) என்ற 'டீன் ஏஜ்' இளைஞன், தன் தாயோடும், வளர்ப்புத் தந்தையோடும் வாழ்ந்து வந்தார். தன் வளர்ப்புத் தந்தையிடம் இருந்த துப்பாக்கியை, ஒரு நாள் பள்ளிக்கு  எடுத்துச் சென்றார், ஜோர்டின். பள்ளியில், தன் நண்பர்கள் குழுவில், ஜோர்டின் அந்தத் துப்பாக்கியை, பெருமையாகக் காட்டிக் கொண்டிருந்தபோது, அதைத் தவறுதலாகச் சுடவே, அவ்வழியே சென்றுகொண்டிருந்த லூர்தெஸ் (Lourdes) என்ற இளம்பெண், குண்டடிப்பட்டு இறந்தார்.

லூர்தெஸின் தாய், ஏடி (Ady Guzman) அவர்கள், செய்தி கேட்டு, நொறுங்கிப் போனார். இளையவர் ஜோர்டின் மீது வழக்கு நடைபெற்றபோது, தாய் ஏடி அவர்களும், நீதி மன்றத்தில் அமர்ந்திருந்தார். வழக்கு முடிந்தது. வளர் இளம் பருவக் கைதிகள் மறு சீரமைப்பு மையத்தில், ஜோர்டின் 3 ஆண்டுகள் தங்கவேண்டுமென்று நீதிபதி தீர்ப்பளித்தார். உடனே, தாய் ஏடி அவர்கள் எழுந்து, ஜோர்டினுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தைக் குறைக்கும்படி மன்றாடினார். நீதி மன்றத்தில் இருந்தோர், ஆச்சரியம் அடைந்தனர். அத்தாயின் வேண்டுகோளுக்கிணங்க, ஜோர்டினின் தண்டனைக் காலம், 3 ஆண்டுகளிலிருந்து, ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. இது குறித்து, செய்தியாளர்கள், தாய் ஏடி அவர்களிடம் கேட்டபோது, தன் மகள் லூர்தெஸ், தன் முடிவைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார் என்று கூறினார்.

ஓராண்டு தண்டனைக் காலம் முடிந்து திரும்பிவந்த இளையவர் ஜோர்டினும், லூர்தெஸின் தாய் ஏடி அவர்களும் இணைந்து, பல பள்ளிகளுக்குச் சென்று உரையாற்றினர். துப்பாக்கிக் கலாச்சாரத்தால் விளையும் துன்பங்களை, தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் பகிர்ந்து கொண்டது, பலரது மனங்களைத் தொட்டது.

இரக்கமும், மன்னிப்பும் மனங்களைத் தூண்டும், மலைகளைத் தாண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.