2016-01-25 16:02:00

பிரிந்த கிறிஸ்தவ சபையின் 500ம் ஆண்டு விழாவில் திருத்தந்தை


சன.25,2016. லூத்தரன் கிறிஸ்தவ சபை தொடங்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு ஆரம்ப விழாவில் கலந்துகொள்வதற்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற அக்டோபர் 31ம் தேதி திங்களன்று, சுவீடன் நாட்டின் Lund நகருக்குச் செல்வார் என்று திருப்பீடம் இத்திங்களன்று அறிவித்துள்ளது.

மேலும், இது குறித்து உலக லூத்தரன் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கத்தோலிக்கத் திருஅவையும், உலக லூத்தரன் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பும் (LWF) இணைந்து நடத்தும் 500ம் ஆண்டு நிறைவு விழா திருவழிபாட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், LWF அமைப்பின் தலைவர் ஆயர் Munib A. Younan, மற்றும் அதன் பொதுச் செயலர் Martin Junge ஆகிய மூவரும் வழிநடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திருவழிபாடு, சுவீடன் கிறிஸ்தவ சபையும், Stockholm கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்து நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவத்தில் சீர்திருத்த சபை தொடங்கப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவு 2017ம் ஆண்டில் இடம்பெறுகின்றது. ஆயினும், இக்கொண்டாட்டங்கள் முன்கூட்டியே நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்துலக லூத்தரன்-கத்தோலிக்க உரையாடல் தொடங்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவும் 2017ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுகிறது. 1947ம் ஆண்டில், Lund நகரில் உலக லூத்தரன் கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் நிறைவு நாளும், புனித பவுல் அடிகளார் மனந்திரும்பிய விழாவுமான இத்திங்கள் மாலை 5.30 மணிக்கு, உரோம் புனித பவுல் பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துவது, திருத்தந்தையின் இந்நாளையத் திட்டத்தில் உள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.