2016-01-25 16:10:00

ஏழ்மைக்கு எதிரான மூன்றாம் உலகப் போருக்கு அழைப்பு


சன.25,2016. கிறிஸ்தவர்கள், நீதிக்காகத் தங்களை அர்ப்பணித்து, ஏழைகளுக்கு உதவுவதற்கு நேரம் ஒதுக்குமாறு விண்ணப்பித்தார், மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ.

இஞ்ஞாயிறன்று, பிலிப்பீன்சின் செபு நகரில் தொடங்கியுள்ள 51வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டிற்கு, திருத்தந்தையின் பிரதிநிதியாகச் சென்றுள்ள கர்தினால் போ அவர்கள், அம்மாநாட்டின் ஆரம்பத் திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கியபோது, ஏழ்மைக்கு எதிராக, மூன்றாம் உலகப் போரைத் தொடங்குமாறு அழைப்பு விடுத்தார்.

பெருமளவான சிறார் உணவின்றி வாடும்வேளை, சத்தான, முதல்தரமான உணவுகளைச் செல்லப் பிராணிகளுக்கு வாங்க பெரும் தொகையைச் செலவழிக்கும் மக்களின் கொடூரங்களுக்கு எதிராகவும், ஏழ்மைக்கு எதிராகவும், ஐம்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் போதுமான உணவின்றி தவிக்கும்வேளை, அதிகமான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் உலகுக்கு எதிராகவும் மூன்றாம் உலகப் போர் ஆரம்பிக்கப்படுமாறு அழைப்பு விடுத்தார் கர்தினால் போ.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மற்றும் பசியால், ஒவ்வொரு நாளும் உலகில் ஏறக்குறைய இருபதாயிரம் பேர் இறக்கின்றனர் என்று ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனம் அறிவித்திருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் போ அவர்கள், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும், பசிக்கொடுமையும், பெருமெண்ணிக்கையில் நடத்தப்படும்  படுகொலை என்று குறிப்பிட்டார்.

கருக்கலைப்பு, மரண தண்டனை மற்றும் கருணைக்கொலை அச்சுறுத்தல்கள் பற்றி குறிப்பிட்ட கர்தினால் போ அவர்கள், தெருக்களில் நற்செய்தியின் மகிழ்வை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

உண்மையான நோன்பு என்பது, பசித்திருப்பவரோடு உணவைப் பகிர்ந்து, வீடற்றவர்க்கு குடியிருப்புக்களை அமைப்பதன் வழியாக, அநீதச் சங்கிலிகளை உடைப்பதாகும் என்றும் கூறினார் கர்தினால் போ.

51வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, இம்மாதம் 31ம் தேதி வரை நடைபெறும். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.