2016-01-25 15:48:00

ஆசியாவின் பல பகுதிகளில் கடும் குளிர், போக்குவரத்து பாதிப்பு


சன.25,2016. கிழக்கு ஆசியாவில் நிலவும் கடுங்குளிரால், தாய்வானில் குறைந்தது 85 பேர் இறந்துள்ளனர் மற்றும் தென் கொரியாவில் அறுபதாயிரம் சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆசியாவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தென் கொரிய Jeju தீவில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டதால், அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் இரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர்.

தென் கொரியாவில் வீசும் கடும் பனிப்புயலால், பலர், இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மிதமான வெப்ப நிலைக்கு பழக்கப்பட்ட ஹாங்காங் மக்களும், வெப்பநிலை மூன்று டிகிரிக்குக் குறைந்ததை அடுத்து குளிரில் துன்புறுகின்றனர்.

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இந்த அளவுக்கு வெப்பநிலை குறைந்தது இல்லை.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.