2016-01-23 15:22:00

மனித வாழ்வை, இயேசுவின் பிறப்பு நிகழ்வாக மாற்ற அழைப்பு


சன.23,2016. கருவில் வளரும் குழந்தையின் முகத்தில் கிறிஸ்துவைப் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கும் இயேசுவின் பிறப்பு நிகழ்வாக, மனித வாழ்வை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார் நியுயார்க் கர்தினால் Timothy Dolan.  

இவ்வெள்ளியன்று வாஷிங்டன் நகரில், வாழ்வுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு, அமல அன்னை மரியா பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் Dolan அவர்கள், பிறந்த அல்லது பிறக்காமல் இருக்கின்ற பச்சிளம் குழந்தையில், குழந்தை இயேசுவைப் பார்க்கிறோம் என்று கூறினார்.

அந்தக் குழந்தையின் தாயில், குறிப்பாக, குழம்பிய, நம்பிக்கையற்ற மற்றும் கலக்கம் அடைந்த நிலையில் உள்ள தாயில், பெத்லகேம் குடிலின் மரியாவைப் பார்க்கின்றோம் என்றும், அத்திருப்பலியில் கலந்து கொண்ட ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட விசுவாசிகளிடம் கூறினார் கர்தினால் Dolan.

அமெரிக்கர்கள், வாழ்வுக் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கு, தீவனத் தொட்டியில் உள்ள ஒரு குழந்தை ஒன்றே போதுமான சாட்சியாகும் என்று கர்தினால் Dolan  அவர்கள் கூறினார்.

2015ம் ஆண்டில் திருவருகை காலத்தின்போது இந்தப் பசிலிக்காவில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் காலியாக இருந்த குழந்தை இயேசு இடத்தில் ஒரு மெக்சிகோ பெண், யாருக்கும் தெரியாமல் தனது குழந்தையை கிடத்திச் சென்றார். இக்குழந்தையைக் குறிப்பிட்டே கர்தினால் Dolan அவர்கள் தனது மறையுரையை வழங்கினார்.

1973ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வழக்கின் இறுதியில், கருக்கலைப்பைச் சட்டமாக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஆண்டுதோறும் சனவரி 22ம் தேதி அல்லது அதையொட்டிய நாளில், மனித வாழ்வுக்கு ஆதரவாகப் பேரணிகளும் செப வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன. இவ்வெள்ளியன்று 43வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்நடவடிக்கையில் 33 கர்தினால்கள், ஆயர்கள், 250 அருள்பணியாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.