2016-01-22 16:20:00

புனித வியாழன் பாதம் கழுவும் சடங்குமுறையில் மாற்றங்கள்


சன.22,2016. புனித வியாழன் திருவழிபாட்டில் பாதம் கழுவும் சடங்கில், ஆண்கள் மட்டுமல்ல, இறைமக்கள் அனைவரும் இணைக்கப்பட வேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய விதிமுறை ஒன்றை திருப்பீடம் இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

திருவழிபாடு மற்றும் அருளடையாளப் பேராயத் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் கையெழுத்திட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆண்கள், பெண்கள், இளையோர், வயதானவர்கள், நோயாளர், நலமாக இருப்பவர்கள், அருள்பணியாளர்கள், அர்ப்பண வாழ்வு வாழ்பவர், பொது நிலையினர் என, இறைமக்கள் சமுதாயத்தின் ஒவ்வொரு நிலை நபர்களும், பாதம் கழுவும் சடங்கில் பங்கு கொள்வதற்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இதன்வழியாக, எருசலேம் மாடியறையில் இறுதி இரவு உணவின்போது, இயேசு ஆற்றிய அடையாளச் செயல், இன்னும் அதிகமாக முழுமையான அர்த்தம் பெறும், இயேசுவின் வரையறையற்ற அன்பாக, அவர் இவ்வுலகின் மீட்புக்காகத் தம்மையே வழங்கினார் என்றும் திருத்தந்தை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, கர்தினால் சாரா அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய கடிதத்தில், கவனமுடன் ஆலோசித்த பின்னர், உரோமானிய வழிபாட்டு முறையில், இம்மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத் தான் தீர்மானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உரோமானிய வழிபாட்டு முறையில் பாதம் கழுவும் சடங்கில், ஆண்கள் மட்டுமே பங்கு கொள்வது குறிக்கப்பட்டுள்ளது, தற்போது அது மாற்றப்பட்டு, இதில் அருள்பணியாளர்கள், திருஅவையின் அனைத்து உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கலாம் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.