2016-01-22 16:12:00

திருத்தந்தை, தொமினிக்கன் குடியரசு அரசுத்தலைவர் சந்திப்பு


சன.22,2016. தொமினிக்கன் குடியரசு அரசுத்தலைவர் Charles Angelo Savarin அவர்கள், Apple நிறுவனத்தின் நிர்வாகப் பிரதிநிதி Timothy Donald Cook ஆகிய இருவரும், தனித்தனியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட வெளியுறவுத் துறைச் செயலர் பேராயர் Paul Richard Gallagher ஆகிய இருவரையும் சந்தித்தார் தொமினிக்கன் அரசுத்தலைவர் Charles Angelo Savarin.

திருப்பீடத்திற்கும், தொமினிக்கன் குடியரசுக்கும் இடையே நல்ல உறவுகள் நிலவுகின்றன என்றும், அந்நாட்டுக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே நிலவும் பலனுள்ள ஒத்துழைப்புக்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.    

மனித மாண்பை வளர்க்கவும், இன்னும், இளையோர் கல்விக்கும், தேவையில் இருப்பவர்க்கு உதவுவதற்கும் திருஅவை ஆற்றிவரும் பணிகளும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்களால் அத்தீவில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் போன்ற விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன.

கரீபியன் தீவு நாடான தொமினிக்கன் குடியரசின் 72 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.