2016-01-21 15:41:00

தொழில் நுட்பமும், பொருளாதாரமும் மனிதர்களை ஆளக் கூடாது


சன.21,2016. 'நான்காவது தொழில் புரட்சி' என்று நாம் அழைக்கும் இந்தக் காலக் கட்டத்தில், வேலை வாய்ப்புக்கள் மிக அதிக அளவில் குறைந்துள்ளன என்றும், இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை விடுத்துள்ளார்.

'நான்காம் தொழில் புரட்சி' என்ற தலைப்பில், சனவரி 20, இப்புதன் முதல், 23 வருகிற சனிக்கிழமை முடிய, சுவிட்சர்லாந்து நாட்டின் Davos-Klosters எனுமிடத்தில் நடைபெறும் உலகப் பொருளாதார சங்கத்தின் பன்னாட்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செய்தியொன்றை விடுத்துள்ளார்.

இச்சங்கத்தின் தலைவர், பேராசிரியர் Klaus Schwab அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, திருத்தந்தை அனுப்பிய இச்செய்தியை, இப்புதன் மாலை நிகழ்ந்த ஆரம்ப அமர்வில், திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் வாசித்தளித்தார்.

தொழில் நுட்பத்தையும், பொருளாதாரத்தையும் முன்னிறுத்தி நடைபெற்றுவரும் 'நான்காம் தொழில் புரட்சி'யில், தனி மனிதர்களுக்கு மதிப்பு தரும் வேலைகள் மிக அதிகமாகக் குறைந்து வருகின்றன என்பதை, திருத்தந்தை தன் உரையில் கவலையுடன் கூறினார்.

தொழில் நுட்பமும், பொருளாதாரமும் மனிதர்களுக்குப் பணிசெய்ய வேண்டுமே தவிர, மனிதர்களை ஆட்டிப் படைக்கக் கூடாது என்பதைச் சுட்டிக்காட்டும் திருத்தந்தையின் செய்தி, மனிதர்களையும், சுற்றுச் சூழலையும் மதிக்கும் தொழில் நுட்பங்களையே நாம் வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றது.

"வறியோரை மறக்க வேண்டாம்" என்ற விண்ணப்பத்தை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன் என்று தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, நாம் அனுபவிக்கும் செல்வக் கொழிப்பினால், மற்ற மனிதர்களின் துன்பங்களை உணர முடியாத நிலை நமக்கு உருவாகக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

சுயநலம், வெளிவேடம் ஆகிய கவசங்களைக் காக்கும் வகையில் வளர்ந்துள்ள அக்கறையின்மையின் ஆதிக்கத்தை நம்மிடம் குறைப்பதற்கு, வறியோரின் அழுகுரல் நம்மை அடையட்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார். 

தொழில்நுட்பம் மிகுந்த கருவிகளாலும், 'ரோபோ'க்களாலும் சூழப்படும் 'நான்காம் தொழில் புரட்சி', பூமியின் முகத்திலிருந்து மனிதர்களை பெரும்பாலும் அகற்றிவிட்டு, ஒரு சிலர் மட்டுமே மகிழ்வுடன் வாழக்கூடிய ஒரு வெற்றிடமான பூங்காவை உருவாக்கிவிடும் என்று திருத்தந்தை இச்செய்தியில் எச்சரித்துள்ளார்.

வர்த்தகம் என்பது, ஓர் உன்னதமான அழைப்பு என்று தான் அடிக்கடி கூறிவந்துள்ள கருத்தை மீண்டும் ஒரு முறை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Davosல் நடைபெறும் பன்னாட்டுக் கூட்டத்தில், மக்களின் வாழ்வுத் தரத்தையும், பூமியின் பாதுகாப்பையும் முன்னிறுத்தி, முடிவுகள் எடுக்க, மாநாட்டு உறுப்பினர்களைத் தூண்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.