2016-01-21 16:05:00

குழந்தை பெற்றெடுத்த வீடற்ற பெண்மணிக்கு திருத்தந்தை உதவி


சன.21,2016. புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்கு அருகே, திறந்த வெளியில் தங்கியிருந்த ஒரு வீடற்ற பெண்மணி, இச்செவ்வாய் இரவு குழந்தையைப் பெற்றெடுத்ததையடுத்து, அப்பெண்ணையும், குழந்தையையும் மருத்துவ மனையில் சேர்த்து கண்காணிக்க, திருத்தந்தையின் தர்மச் செயல்கள் அமைப்பு முயற்சிகள் மேற்கொண்டது என்று திருப்பீடச் செய்தித் தொடர்பாளர், அருள்பணி ஃபெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.

ரொமேனியா நாட்டைச் சேர்ந்த 36 வயதான மரியா கிளவுதியா என்ற பெண், இச்செவ்வாய் அதிகாலையில் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, உடனே தகவல்கள் அனுப்பப்பட்டு, அருகில் உள்ள சாந்தோ இஸ்பிரித்தோ மருத்துவ மனையில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர் என்றும், இருவரும் நலமுடன் இருக்கின்றனர் என்றும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajeswski அவர்கள் தாயையும், சேயையும் சந்தித்தார் என்றும், அவர்களுக்கு, அன்னை தெரேசா காப்பகத்தில் ஓராண்டிற்கு இடம்பெற்றுத் தருவதாக வாக்களித்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.