2016-01-20 14:43:00

மறைக்கல்வி உரை – திருமுழுக்கில் நாமனைவரும் சகோதர சகோதரிகளே


சன.,20,2016. ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் 18ம் தேதி முதல் 25ம் தேதி வரை கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம் திருஅவையில் சிறப்பிக்கப்படுகின்றது. தற்போது இடம்பெற்று வரும் இந்த சிறப்பு வாரம் குறித்து தன் புதன் மறைக்கல்வி உரையின்போது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்புச் சகோதர சகோதரிகளே! இவ்வாரம் நாம் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டிற்கான மையக்கருத்து, தூய பேதுருவின் முதல் மடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.  இதனைத் தேர்வு செய்தவர்கள் லாத்வியாவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ ஒன்றிப்பு குழுவினர். தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் தங்கள் திருமுழுக்கின் வழியாகப் பெற்றுக்கொண்ட உன்னதக் கொடையை ஏற்றுக்கொண்டு, அதற்கு இயைந்த வகையில் வாழவேண்டும் என தனது மடலில் ஊக்கமளிக்கிறார் தூய பேதுரு.  தூய பேதுரு, தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களிடம் கூறுகிறார், “நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள்”என்று. இறைமக்களாக கிறிஸ்துவில் நம் ஒன்றிப்பைக் குறித்து தியானித்து, அதற்குச் சாட்சியாக விளங்கவேண்டும் என இந்த ஒன்றிப்பின் வாரம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமக்குள்ளேயே பிரிவினைகள் இருக்கின்றபோதிலும், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவுக்குள் புதுப்பிறப்பெடுத்த நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே. தூய பேதுரு கூறுவதுபோல், ' உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி' என்ற கட்டளையை நம் திருமுழுக்கில் நாம் ஒவ்வொருவரும் பெற்றுள்ளோம். நம்மை எது பிரிக்கின்றதோ அதைவிட நம்மை ஒன்றிணைக்கும் அந்த உன்னதக் கூறில் நாம் வளர நமக்கு உதவ வேண்டும் என இந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் இறைவனை நோக்கி வேண்டுவோம்.

நாம் பெற்றுக்கொண்ட இறை இரக்கத்தை ஏனையோருடன், குறிப்பாக, உலகின் ஏழைகள் மற்றும் மறக்கப்பட்டு கைவிடப்பட்டோருடன் பகிர்ந்துகொள்ள விடப்பட்டுள்ள அழைப்பிற்கு நாம் ஒன்றிணைந்து பதிலுரைக்க முடியும்.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.